கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை வைத்துள்ளனர் .
கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் அது அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும்.சிறீலங்கா அரசு வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவி வருகின்றன. படையினரால் கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே இருக்கின்றது என்பதனை சுட்டிக் காட்டுகின்றேன். இதனை உடனடியாக அகற்ற வேண்டும். கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று பதில் வரலாம் கச்சத்தீவு திருவிழாவின் போது கடற்படையினரின் விருந்தினர்களுக்கே முன்னிலை வழங்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.