உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, செளதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்பிற்காக இனி விளையாட உள்ளார். அவர் அந்த கிளப்பில் இணைந்ததில் இருந்து அவரது பல படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
சில படங்களில் அவர் செளதி அதிகாரிகளுடன் உணவு சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. சில வீடியோக்களில் அவர் பயிற்சி செய்வதை நாம் காணலாம். எனினும் ஓர் ஆட்டத்துக்கு அவர் தடை செய்யப்பட்டதால் இதுவரை செளதி கிளப் அணிக்காக அவரால் எந்த போட்டியிலும் விளையாட முடியவில்லை.
ஆனால் அவரது சொந்த வாழ்க்கை செளதி அரேபியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் ரொனால்டோ தனது லிவ்-இன் பார்ட்னர் ஜார்ஜினாவுடன் செளதி அரேபியாவில் ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகிறார்.
செளதி அரேபியாவில் திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொள்வது அல்லது ஒன்றாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு கடுமையான தண்டனை வழங்கவும் விதிமுறை உள்ளது.
இதுவரை செளதி அரேபிய அதிகாரிகள், அல் நாசர் கால்பந்து கிளப் அல்லது ரொனால்டோ, இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் செளதி அரேபியா சட்டத்தை மாற்றாது வெளிநாட்டினருக்கு காட்டப்படும் மென்மை போக்கு மட்டும் ரொனால்டோ, ஜார்ஜினா விவகாரத்திலும் செயல்படுத்தப்படும் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.