செய்திகள் விளையாட்டு

மொராக்கோவின் சிறப்பான ஆட்டம் – தோற்றாலும் வரலாறு படைத்த வீரர்கள் !

பிரான்ஸ் அணி, மொரோக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழையவிருக்கிறது. இறுதிச்சுற்றில் பிரான்ஸ், அர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது.

மொரோக்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டின் கால்பந்து அணிக்கு அட்லஸ் லயன்ஸ் என்று பெயர். அவர்களுடைய பெயருக்கு ஏற்றாற்போலவே, பிரான்ஸ் உடனான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் செயல்பட்டார்கள்.

இந்த ஆண்டின் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே, தனக்கு எதிராக ஆடிய எந்த அணிக்கும் ஒரு கோலை கூட விட்டுக்கொடுக்காமல் ஆடிய மொரோக்கோ அணியின் எல்லைக்குள் புகுந்த தியோ ஹெர்னாண்டெஸ், அரையிறுதி ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே பிரான்ஸ் அணிக்காக ஒரு கோலை அடித்தார்.

யசின் பூனோவின் தற்காப்பைக் கடந்து அதைச் சாத்தியமாக்கியதன் மூலம் கட்டாரில் மொரோக்கோவுக்கு எதிராக முதல் கோலை அடித்த பெருமையை அவர் பெற்றார்.
ஆறு மொரோக்கோ வீரர்கள் எம்பாப்பே அடிக்க முயன்ற கோலை தடுத்து கோல் பாக்ஸ் எல்லைக்குள் இருந்து வெளியே தள்ளினார்கள். ஆனால், அந்த நேரம் பார்த்து அந்த இடத்திற்கு அருகில் வந்த தியோ ஹெர்னாண்டெஸ் சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தினார்.

கோல் கீப்பர் யசின் பூனோ, தற்காப்பு ஆட்டக்காரர்களான அஷ்ரஃப் தாரி, ரொமைன் சைஸ் ஆகியோர் அதைத் தடுக்க முயன்றபோதும், அவர்களுக்கு நடுவில் புகுந்து சென்ற பந்து மொராக்கோவுக்கு முதல் இடியாக இறங்கியது.

ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில், ஒரு கோல் முயற்சியைத் தடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத தருணத்தில் விழுந்த அந்த கோல், பிரான்ஸ் ரசிகர்களுக்கு அபாரமான நம்பிக்கையையும் மொரோக்கோ ரசிகர்களின் முகத்தில் என்ன நடந்தது என்ற அதிர்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியது.

ஆரம்பத்திலேயே நிகழ்ந்த அந்தப் பின்னடைவை நிவர்த்தி செய்ய, கடுமையான எதிராட்டத்தை மொரோக்கோ நிகழ்த்தியது. வழக்கமாக குறைந்த நேரமே பந்தை தங்கள் ஆளுமையில் வைத்திருக்கும் அவர்கள், இந்தப் போட்டியில் அதிக நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆட்டத்தை ஆடினர்.

முதல் பாதி முடிந்த போது, இரு அணிகளுக்குமே அழுத்தம் அதிகமாக இருந்தது. மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியாது என்ற அழுத்தத்தில் பிரான்ஸ். ஒரு கோல்கூட எடுக்காமல் இருந்ததால், எப்படியாவது ஒரு கோல் அடித்து சமன் செய்து, வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் மொரோக்கோ.

பிரான்ஸ் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தபோதிலும், ராண்டால் கோலோ முவானி, 79வது நிமிடத்தில் களமிறங்கி கோல் அடிக்கும் வரை அவர்களால் மொரோக்கோவுக்கு எதிராக இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை.

அந்த கோலின் மூலம், 1962ஆம் ஆண்டில் பிரேசில் செய்த சாதனைக்குப் பிறகு, உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாகத் தக்க வைக்கும் வாய்ப்பு பிரான்சுக்கு கிடைத்துள்ளது.

உலகக்கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்ற மொரோக்கோ, சனிக்கிழமை 16.00 மணிக்கு குரோஷியாவுடன் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்காக மோதுகிறது.

இதே வேளை, ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பிரான்ஸ், தொடர் வெற்றியோடு சாதனை படைக்க வேண்டுமென்று, கிட்டத்தட்ட ஒரு டன் அளவுக்குக் கனமான அழுத்தம் அவர்கள் தலையில் உள்ளது. அதைவிட அதிகமான அழுத்தம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது. ஆம், 36 ஆண்டுகால கனவாயிற்றே!ஆக, இந்தப் போட்டி, மறுக்க முடியாத ஒன்றாக, கவர்ச்சிகரமானதாக இருக்கப் போகிறது.

பிரான்ஸ் தரப்பில் கிலியன் எம்பாப்பே சிறந்த வீரராக, இந்தத் தொடரில் ஐந்து கோல்களுடன் இருக்கிறார். அர்ஜென்டினா தரப்பில், கால்பந்து வரலாற்றிலேயே சிறந்த வீரராகக் கூறப்படும் லியோனெல் மெஸ்ஸியும் இந்தத் தொடரில் ஐந்து கோல்களுடன் இருக்கிறார்.

மெஸ்ஸி உலகக்கோப்பைக்கு முன்பாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்புக்காக விளையாடியபோது, இருவரும் ஒன்றாக விளையாடினார்கள்.

1934, 1938 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு முறை இத்தாலி உலகக்கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 1958, 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பிரேசில் உலகக்கோப்பையை வென்றது. இப்போது மூன்றாவது முறையாக பிரான்சுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த முறையும் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினால், பிரான்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை உயர்த்தும். கடந்த ஏழு உலகக்கோப்பை தொடர்களில், 1998, 2018 ஆகியவற்றில் பிரெஞ்சு அணி வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டு இறுதிச்சுற்று வரை வந்து தோல்வியடைந்தது.

அர்ஜென்டினா, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 1930, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை வந்துள்ளது. இறுதிச்சுற்றுக்குள் அர்ஜென்டினா ஆறாவது முறையாக வருகிறது.

Related posts

சிறுப்பிட்டி பகுதியில் கட்டுபாட்டை இழந்து பேருந்து விபத்து

namathufm

மோடியை சந்தித்தார் பசில்

Thanksha Kunarasa

புத்தாண்டின் போது இலங்கை அரசின் நிலைமை -மனோ

Thanksha Kunarasa

Leave a Comment