கட்டாரில் நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலக கோப்பையின் முதல் அரையிறுதி முடிந்து அர்ஜென்டினா இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது. அடுத்த அரையிறுதி ஆட்டம் இன்று இரவு 20.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மோதப்போகும் பிரான்ஸ், மொராக்கோ ஆகிய இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள்?
பிரான்ஸ், மொராக்கோவுக்கு இடையிலான ஆட்டம், இரண்டு சிறந்த தற்காப்பு அணிகளுக்கு இடையிலான போராட்டமாக இருக்கக்கூடும்.
நொக் அவுட் ஆட்டங்களில் ஒரு கோலைக்கூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் பிரான்ஸ் ஆடியது. போலந்து, இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் பெனால்டி ஷாட் கோல்களை மட்டுமே கொடுத்தது.
இந்த உலக கோப்பையின் மொத்த போட்டிகளிலும் மொராக்கோ அணிக்கு எதிராக கனடாவுக்கு கிடைத்த ஒரு கோலை தவிர வேறு எந்த அணியாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
கட்டாரில் அதிக கோல் அடித்த கிலியன் எம்பாப்பே (5 கோல்கள்) மற்றும் ஒலிவியே கிரூட்(4 கோல்கள்) ஆகிய இருவரும் பிரெஞ்சு அணியில் உள்ளனர்.
கிலியன் எம்பாப்பே, தனக்குப் பழக்கமான அஷ்ரஃப் ஹக்கிமியுடன் மோதவிருக்கிறார். இருவரும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் ஒன்றாக விளையாடுபவர்கள். ஹக்கிமியும் இந்த உலகக் கோப்பையின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக தனிக்கவனம் பெற்று நிற்கிறார்.

பிரான்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களில் சிலருக்கு ஏற்பட்ட காயங்களால், இளம் வீரர்கள் அவர்களுடைய இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
1958, 1962 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பைகளை பிரேசில் வென்றது. அதைப் போன்ற சாதனையை நடப்பு சாம்பியனான பிரான்ஸ் செய்ய வேண்டுமென்ற இலக்கோடு ஆடி வருகிறது.
கால்பந்து உலக கோப்பையில் ஏழாவது முறையாக பிரான்ஸ் முதல் நான்கு இடங்களுக்குள் வந்துள்ளது.
2018ஆம் ஆண்டு குரோஷியாவை இறுதிச்சுற்றில் எதிர்கொண்டது. அரையிறுதியில் வென்றால், இந்த முறை அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும்.
ஃபிஃபா 2022 தொடங்கிய நேரத்தில், தரவரிசைக்கு வெளியே மொராக்கோ இருந்தது. இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
பிரான்சும் மொராக்கோவும் இதுவரை, உலகக் கோப்பை போட்டிகளில் மோதியதில்லை. இதற்கு முன்பு 1963ஆம் ஆண்டில் மட்டுமே மொராக்கோ பிரான்ஸை தோற்கடித்துள்ளது.
பிரான்ஸ் அணி, எதிரணியிடம் அதிமான நேரம் பந்து இருக்க விட்டாலும்கூட, எதிரணியைத் தாக்குவதற்கான தருணத்திற்குக் காத்திருப்பதே அதன் யுக்தியாக இதுவரை இருந்துள்ளது.
இது இங்கிலாந்துக்கு எதிராக பயனுள்ள உத்தியாக இருந்தது. இதே அணுகுமுறை கடந்த உலக கோப்பையிலும் அவர்களுக்குப் பலனளித்தது.
ஆனால் மொராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில், பந்தை தன் வசம் அதிகமாக வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதுகூட, பிரான்ஸில் உள்ள தாக்குதல் வீரர்களுக்குக் கடினமாக இருக்காது.
ஆனால், மொராக்கோவின் யுக்தியாக இன்னமும் கடுமையான தற்காப்பு ஆட்டமே உள்ளது. அது கடந்த ஐந்து போட்டிகளிலும் சராசரியாக 32 சதவீதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.
இது எந்த அணியிடமும் இல்லாத அளவுக்குக் குறைவான நேரம். அதிலும் காலிறுதியில் போர்ச்சுகலை வெளியேற்றிய ஆட்டத்தில், வெறும் 26 சதவீதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.
இதில் மொராக்கோ வீரர்களின் ஊடுருவ முடியாத தற்காப்பு ஆட்டமும் சோஃபியான் பூஃபால் போன்றோரின் வேகமான எதிர்த்தாக்குதல் திறனைச் சார்ந்திருக்கும் யுக்தி வேலை செய்ததே வெற்றி பெறக் காரணம்.
இரண்டு அணிகளுமே சிறப்பான எதிர்த்தாக்குதலையும் தற்காப்பையும் கொண்டிருக்கும் சூழலில், இந்த அரையிறுதிப் போட்டி ஒருவேளை அர்ஜென்டினா-குரோஷியா போட்டியை விடவும் சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும்.