டெல்லியில் புதன்கிழமை காலையில் 17 வயது சிறுமி மீது அசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தமது வீட்டில் இருந்து பள்ளிக்கு அந்த சிறுமி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகா மெட்ரோ தொடருந்து நிலையம் அருகே உந்துருளியில் வந்த இருவர் அவர் மீது அமிலம் போன்ற பொருளை வீசியுள்ளனர். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் காயமடைந்த சிறுமி அசிட் வீசியவர்கள் குறித்து தெரிவித்த அடையாளத்தைத் தொடர்ந்து ஆரம்பத்தில் ஒருவரை காவல்துறை கைது செய்தனர்.