போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
போர்ச்சுக்கல் அணி காலிறுதி போட்டியில் இருந்து வெளியேறியவுடன் ரொனால்டோவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
தனது அணியின் பயிற்சியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவரது தகுதி குறைக்கப்பட்டு ஒரு மாற்று வீரராக அதாவது சப்ஸ்டியூட் ஆக ஆட்டத்தில் இறக்கப்பட்டார் ரொனால்டோ. 37 வயதாகும் ரொனால்டோவால் இன்னும் உலகக் கோப்பை வெற்றி என்ற மகுடத்தை சூட முடியவில்லை. கடந்த மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் இருந்து அவர் கோபமாக வெளியேறினார். எனவே அவரின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தாலும் திரும்பி சென்று ஆடுவதற்கு எந்த கிளப்பும் காத்திருக்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்கள் ரொனால்டோ அடுத்து எந்த கிளப்பில் விளையாடப் போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

யூரோ 2016 போட்டியில் வென்று, முதன்முறையாக போர்ச்சுகல் சர்வதேச போட்டி ஒன்றில் வெற்றிப் பெற்றுள்ளது என்ற சிறப்பை தேடி தந்தவர் ரொனால்டோ. இப்போதும் இதை போர்ச்சுகல் மக்கள் மறக்கவில்லை.
சனிக்கிழமையன்று அல் துமாமா ஸ்டேடியத்திற்கு வெளியே ‘ரொனால்டோ 7’ சட்டைகளை அணிந்திருந்த போர்ச்சுகல் ரசிகர்களின் எண்ணிக்கையே அதற்கு சான்று.
அடுத்த உலக் கோப்பை போட்டி தொடங்கும்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகியிருக்கும். ஆனால், அவர் விரும்பினால், நிச்சயமாக யூரோ 2026 ஆம் ஆண்டு கோப்பை போட்டிக்கு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. அதற்குள் அவர் யாருக்காக விளையாடப்போகிறார் என்பது முற்றிலும் வேறு விஷயமாக இருக்கிறது.
ஜனவரி 1 ஆம் தேதி அணிகளுக்கு இடையே வீரர்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு தொடங்கும் போது ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய பல கிளப்புகள் ஆர்வமாக உள்ளன, சவுதி அரேபிய தரப்பில் அல்-நாஸ்ர் அவரை ஒரு பெரிய தொகையுடன் ஒப்பந்தம் செய்வதாக கடந்த வாரம் கூறியிருக்கிறார். தற்போதைய இந்தப் போட்டியில் மத்திய கிழக்கு மைதானம் அவருக்கு மகிழ்ச்சியை வழங்காமல் இருந்திருக்கலாம் – ஆனால் அடுத்ததாக அவர் களம் இறங்கும் இடமாகவும் இருக்கலாம்.