தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மேன்டோஸ்’ புயல் நேற்று இரவு மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக 60க்கும் மேற்பட்ட வீதியோர மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 150 படகுகள் புயலின் தாக்கத்தால் சேதமடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை கரையில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தியிருந்த போதிலும், பலத்த காற்று காரணமாக பல படகுகள் தலைகீழாக கவிழ்ந்துள்ளன.
புயலின் தாக்கம் குறைந்த பிறகே, படகுகள், வலைகள் மற்றும் மோட்டார்கள் எவ்வளவு சேதமடைந்தன என்ற முழுவிவரம் தெரியவரும் என கோவளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல தங்களுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைக்கிறார்.