கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், கத்தாரின் மனித உரிமை நிகழ்வுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மைதானங்கள் மற்றும் தங்கும் விடுதிகளைக் கட்டிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால் கத்தாரின் ஆளும் வர்க்கங்களிடம் வேலை செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்களின் நிலை என்ன!
2022 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை கத்தார் பெறுவதற்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் முதலாளியின் அனுமதியின்றி வேலையை மாற்றவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ முடியாது. பெரும்பாலான வளைகுடா நாடுகளில் இன்னும் இந்த நிலை உள்ளது.
கத்தார் சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியது. ஆனால் அவை எல்லா நேரங்களிலும் நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக, முதலாளி அவர்களது கடவுச் சீட்டை வாங்கி வைத்துவிடுவார். இங்கிருந்து வெளியேறுவதற்காக அதைக் கேட்டால், அவருக்கு அது கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
கத்தாரில் உள்ள பணிப்பெண்கள் உடல் ரீதியாகவும் அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள். திட்டமிடல் மற்றும் புள்ளியியல் ஆணையத்தின் 2021ஆம் ஆண்டு தரவுகளின்படி, கத்தாரில் 1,60,000 வீட்டுப் பணியாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு வீட்டுப் பணியாளர்கள் சட்டத்தை கத்தார் அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் வேலை நேரத்தை ஒரு நாளுக்கு 10 மணிநேரமாக கட்டுப்படுத்துகிறது. மேலும் தினசரி இடைவேளைகள், வாராந்திர விடுமுறை மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் வழங்குவதையும் உறுதி செய்கிறது.
குறைந்தபட்ச ஊதியம் மற்றும் முதலாளியின் அனுமதி பெறாமல் வேலைகளை மாற்ற அல்லது நாட்டை விட்டு வெளியேறும் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் சட்டத்தை 2020ஆம் ஆண்டு கத்தார் அறிமுகப்படுத்தியது.
ஆனால், இந்தச் சட்டங்கள் எல்லா நேரங்களிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், வேலைப்பளு, ஓய்வு இல்லாமை, தவறாக மற்றும் இழிவாக நடத்தப்படுவது இன்னும் தொடர்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.