இலங்கை உலகம் செய்திகள்

சுவிசிலாந்தில் கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா 01-10-2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

சுவிசிலாந்தில் லுசேர்ன் நகரத்தில் 25 ஆண்டுகளாக நடனக்கலையை வளர்த்து வருகின்றார் ஆசிரியை முதுகலைமானி திருமதி நிமலினி ஜெயகுமார். இவர் தாயகத்தில் இவரது சகோதரி கலாபூசணம் பத்மினி செல்வேந்திரகுமார் அவர்களை குருவாகக் கொண்டு நடனக் கலையை கற்றறிந்தார். சுவிஸ் மண்ணில் நூற்றுக்கணக்கான நடன மாணவர்களை உருவாக்கியும் உள்ளார். அனைத்துலக தமிழ் கலை நிறுவகத்தின் உறுப்பினராகவும் ஆசிரியை நிமலினி ஜெயகுமார் அவர்கள் செயற்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாது ஐரோப்பிய மண்ணில் இடம் பெறும் பல நடன நிகழ்வுகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.


கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவில் நுழை வாயிலில் மங்கள விளக்கேற்றலை திரு.திருமதி ஜெயக்குமார் நிமலினி தம்பதியினர் ஏற்றி வைத்து நிகழ்வு ஆரம்பமானது.மேடையில் அரங்கத்தில் கீழேயுள்ள மங்கள விளக்கேற்றல். அனைத்துலக தமிழ் கலை நிர்வாக உறுப்பினர்கள் ஏற்றி வைத்தார்கள். பரதக்கலையின் அதிபதி நடராச பெருமானின் அரங்க வழிபாட்டினை சிவாச்சார்ய சிரோன்மணி, சொல்வேந்தர், சிவசிறீ சோமஸ்கந்த சர்மா அவர்கள் தொடக்கி நிகழ்த்தி வைத்தார். பின்னர் நடராஜப் பெருமானின் திருவிளக்கேற்றலை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றினர்.வரவேற்புரையை திருவாளர் தியாகராஜா ஜெயக்குமார் நிகழ்த்தினார்.


வெள்ளி விழாவிலே சிறப்பு விருந்தினர்களாக , சுவிசிலாந்தின் முன்னணி ஆசிரியையாக விளங்கி வரும் திருக்கோணேஸ்வரா நடனாலயம் இயக்குனர் கலாநிதி திருமதி மதியவதனி சுதாகரன், பாசல் மாநகரில் கலாநிகேதன் நடனாலயத்தை இயக்கி வரும் ஆசிரியை முதுகலைமானி திருமதி கிருஷ்ணபவானி சிறிதரன், சூரிச் மாநிலத்தில் ராதா நடனலயத்தை நிறுவி கலை வளர்த்து வரும் ஆசிரியை முதுகலைமானி திருமதி ஞானசுந்தரி வாசன் அவர்களுடன் டென்மார்க் நாட்டில் கலாசேந்திரா நடனாலயத்தை நிறுவி அங்கு கலை வளர்க்கும் பரதக்கலைப் பட்டதாரியும் தஞ்சாவூர் பல்கலையின் பயிற்றப்பட்ட ஆசிரியையான திருமதி சுமித்திரா சுகேந்திரா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


இந் நிகழ்வில் அணிசேர் கலைஞர்களாக தாய்த் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்தார்கள், வாய் பாட்டு வித்வான் திரு பவானி கிஷோக்குமார், தண்ணுமை (மிருதங்கம்) வித்வான் திரு N. இராமகிருஷ்ணன், பிடில் (வயலின்) வித்வான் திரு S. இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இவர்களுடன் ஒட்டோபாட் செல்வன் சாரு ஜெயகுமார் இணைந்திருந்தார். நட்டுவாங்கம் கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் ஆசிரியை முதுகலைமானி திருமதி நிமலினி ஜெயகுமார் நிகழ்த்தியிருந்தார்.


கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் மாணவிகளால் புஸ்பாஞ்சலி, மல்லாரி, கணபதி கீர்த்தனம், ஸ்லோகம், தமிழ்பாட்டு , தீப நடனம், ஜதீஸ்வரம், பாலர் நடனம், பத வர்ணம், நாட்டிய நாடகம் (கீதா உபதேசம்) ஆகிய நடன உருப்படிகளை பார்வையாளர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அரங்கிலே அளித்தார்கள். மேலும் கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் முன்னாள் மாணவி ஆசிரியை திருமதி ரேதுகா பிரவீன் அவர்களின் மாணவிகளது பாலர் நடனமும் அரங்கில் இடம்பெற்றது.


சிறப்புரைகளை முதன்மை விருந்தினர்கள் முதுகலைமாணி ஞானசுந்தரி வாசன், கலாநிதி, திருமதி மதிவதனி சுதாகரன், முதுகலைமானி திருமதி கிருஷ்ணபவானி சிறிதரன், பரதக்கலைப் பட்டதாரியும் தஞ்சாவூர் பல்கலையின் பயிற்றப்பட்ட ஆசிரியையான திருமதி சுமித்திரா சுகேந்திரா ஆகியோர் நிகழ்த்தினார்கள். அவர்களது உரையில் அரங்கில் மாணவர்களது வெளிப்பாடுகள் பற்றியும் மாணவர்களது திறன், விட்டுக்கொடுப்பு, ஒழுக்கம் பற்றியும் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினர். ஆசிரியை நிமலினி பற்றி முதுகலைமானி திருமதி கிருஷ்ணபவானி சிறிதரன் குறிப்பிட்டு பேசுகையில் அவரோடு தான் பயணித்த அரங்கங்களை நினைவில் கொண்டு வந்து அவரது கலைத்திறன் ஆற்றலை பாராட்டி உரையாற்றியிருந்தார். டென்மார்க்க்கில் இருந்து வருகை தந்த ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா அவர்கள் ‘வெள்ளிச் சதங்கை 2022’ எனும் விருதை கலைக்கோவில் ஆசிரியை முதுகலைமானி திருமதி நிமலினி ஜெயகுமார் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.


வெள்ளிவிழா அரங்கத்தில் அணிசேர் கலைஞர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்வுக்கு வருகை தந்த நடன ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் , உடையலங்காரம் கலைஞர் திரு முருகன் [ தமிழகம் ], அலங்காரம் திருமதி ரூபனா இளங்கோ, நிழற்படக் காணொளி திருமதி வசீகரன், ஒலி அமைப்பு திரு சிவானந்தம், உணவு ஒருங்கிணைப்பு திரு காண்டிபன்,சிற்றுண்டி ஒருங்கிணைப்பு திருமதி தர்மா ஆகியோரும் மதிப்பளிக்கப்பட்டனர். கலைக்கோவில் மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டது.


கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா அரங்க நிகழ்வுகளை பிரான்சில் இருந்து வருகை தந்த அறிவிப்பாளர் திரு. நாகேஸ்வரன் குருபரன் அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தார். வெள்ளிவிழா நிறைவாக நன்றியுரையினை கலைக்கோவில் நிறுவுனர் ஆசிரியை திருமதி நிமலினி ஜெயகுமார் நிகழ்த்தினார். அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் வெள்ளிவிழா மண்டபத்தை நிறைத்திருக்க கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் வெள்ளிவிழா நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது .


Related posts

உக்ரைன் மீது ரஷியா நடத்திய போர் இனப்படுகொலை – அதிபர் ஜோ பைடன்

Thanksha Kunarasa

ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை; வெளிவிவகார செயலாளர்.

Thanksha Kunarasa

றோயல் கடற்படை போர்க்கப்பலுடன் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மோதியதாக தகவல்!

editor

Leave a Comment