தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (செப்டம்பர் 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்தவகையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் கடந்த 10ஆம் தேதி அமலுக்கு வந்தது. முன்னதாக மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில், சுமார் 4,500-க்கும் மேற்பட்டோர் கட்டண உயர்வுக்கு எதிராக மனுக்கள் அளித்திருந்த நிலையிலும் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.