உலகம் பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸில் போக்குவரத்துகளில் மீண்டும் மாஸ்க் அணிய வேண்டிவரும் ஒமெக்ரோனின் உப திரிபு அலையாகப் பரவுகின்றது.

பிரான்ஸில் பொதுப் போக்குவரத்துகளில் மீண்டும் மாஸ்க் அணியும் கட்டாய விதி குறித்துப் பரிசீலிப்பது நல்லது என்று தடுப்பூசி நிபுணர் ஒருவர் கூறியிருக்கிறார்.

புதிய வைரஸ் திரிபுகள் கோடை வெப்ப காலப் பகுதியிலும் வேகமாகப் பரவ ஆரம்பித்திருப்பதை அடுத்தே இவ்வாறு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நலிவான வயோதிபர்கள், நோய்களால் பலவீனமானவர்கள் ஆகிய தரப்பினரைப் பாதுகாப்பதற்காக சமூகத்தின் ஏனைய தரப்பினர் மாஸ்க் அணிந்து கொள்வது

நல்லதே என்று நாட்டின் தடுப்பூசி உத்தி தொடர்பான கண்காணிப்புக் கவுன்ஸிலின் தலைவர் அலைன் பிஷ்ஷர் (Alain Fischer) செய்தி ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் பொதுப் போக்குவரத்துகள் உட்பட சகல பொது இடங்களிலும் மாஸ்க் அணியவேண்டும் என்ற சுகாதார விதிகள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முற்றாக நீக்கப்பட்டன.

ஐரோப்பாவில் ஒமெக்ரோன் திரிபின் இரண்டு புதிய உப திரிபுகள் வரும் கோடை விடுமுறைக் காலத்தில் புதிதாகத் தொற்றலைகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்ரா வைரஸ் திரிபைப் போன்று தற்சமயம் ஒமெக்ரோன் திரிபுகள் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தொற்றுக் கிரிமிகளாக மாறியுள்ளன.

பிரான்ஸ், ஜேர்மனி, போர்த்துக்கல், டென்மார்க் போன்ற நாடுகளில் பிஏ4, பிஏ5 (BA4, BA5) ஆகிய இரண்டு ஒமெக்ரோன் திரிபுகள் வேகமாகப் பரவவத் தொடங்கியுள்ளன. பிரான்ஸில் கடந்த சில வாரங்களில் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்திருப்பது சுட்டிக்

காட்டப்படுகிறது. ஜூன் 12 முதல் 18 வரை நாளாந்தத் தொற்று எண்ணிக்கைசராசரியாக 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.சுகாதாரப் பகுதியினர் இதனை ஒரு தொற்றலையாக இன்னமும் அறிவிக்கவில்லை. ஆயினும் வரும் குளிர் காலத் தொடக்கத்தில் நாடு ஏழாவது தொற்றலையைச் சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் பரவுகின்ற பிஏ4, பிஏ5 திரிபுகள், தடுப்பூசிகள் மூலமும் முந்திய தொற்று மூலமும் உடலில் உருவாகிய எதிர்ப்புச்சக்தியை மீறிச் சகலரையும் பீடிக்கின்ற தன்மை வாய்ந்தவை என்பதைத் தொற்று நோய் நிபுணர்கள் குறிப்பிட்டு எச்சரித்து வருகின்றனர்.

இந்த இரு திரிபுகளில் இருந்தும் முழுப் பாதுகாப்புப் பெற்றவர்கள் என்று எவருமே கிடையாது என்பதை அவர்கள் நினைவூட்டியுள்ளனர்.

பாரிஸிலிருந்து மூத்த ஊடகவியலாளர் குமாரதாஸன்.

Related posts

அமெரிக்காவில் 430 அடி உயர ராட்டினத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி

Thanksha Kunarasa

கிளாஸ்கோ நகர வீதியில் அணு ஆயுத வாகன அணி ?

namathufm

கிராமத்துக்கு தீ வைத்தது படை; நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

Thanksha Kunarasa

Leave a Comment