உலகம் செய்திகள்

ஐரோப்பாவில் “குரங்கு அம்மை”! ஆபத்தான ஒரு தொற்று நோயா?

இங்கிலாந்து, ஸ்பெயின் போர்த்துக்கல் இத்தாலி, சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா போன்ற இடங்களிலும் குரங்கு அம்மை (monkeypox) பரவிவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து பல டசின் கணக்கான தொற்றாளர்கள் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் குரங்கு அம்மை சமூகத் தொற்றாக மாற்றிவிடலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தொற்றுக்குள்ளானோர் அனைவருமே ஆண்கள் என்றும் அவர்கள் ஓரினச்சேர்கைத் தொடர்புடையவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குரங்கு அம்மை எங்கிருந்து எப்படிப்பரவுகிறது? மிக அரிதான வைரஸ் வகைகளில் ஒன்றாகிய குரங்கு அம்மை Monkey pox என்றும் simian orthopoxvirus என்றும் அழைக்கப்படுகின்றது. 1970 களில் ஆபிரிக்காவின் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் முதன்முதலாக மனிதர்களில் கண்டறியப்பட்டது.

மேற்கு ஆபிரிக்காவின் ஈரப்பதம் நிறைந்த வெப்பமண்டலக் காடுகளை அண்டிய கிராமப் புறங்களிலேயே அதன் தொற்றுத் தொடர்பான பதிவுகள் உள்ளன.விலங்குகளில் இருந்து நேரடியான இரத்தத் தொடர்பு மூலமும் உடல் திரவங்களின் ஊடாகவும் தோல் புண் வழியாகவுமே இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுகிறது.

உலகசுகாதார அமைப்பின் தகவலின்படி குரங்குகள், கம்பியா நாட்டு ராட்சத எலிகள், மற்றும் அணிகள் மூலம் இந்தவைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. குரங்கு அம்மை தொற்றிய ஒருவரோடு நெருங்கிப் பழகுகின்ற போது அது அடுத்தவருக்குத் தொற்றுகின்றது. சுவாசத்தோடு வெளியேறும் நீர்த் துகள்கள் மற்றும் உடல் உயிரியல் திரவங்கள் இந்த வைரஸக் காவி அடுத்தவருக்குப் பரப்பக் கூடியவை.

தொற்றாளர் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் இரண்டு கட்டங்களாகத் தோன்றும்.காய்ச்சல், தலைவலி, சுரப்பிகளில் வீக்கம், தசைநார் வலி என்பன அவற்றில் சிலவாகும். பின்னர் சுமார் பத்து நாட்களில் தோல் சொறி தோன்றும். திரவம் நிரம்பிய சிறிய கொப்பளங்கள் உடலெங்கும் உருவாகும். இது இரண்டாவது கட்டம் என்று உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்களில் தெரிவிக்கப்படுகிறது.

குரங்கு அம்மை வைரஸ் இலகுவில் உயிராபத்தை ஏற்படுத்தாது என்றும் விலங்குகளில் இருந்து மனிதனுக்குப் பரவுகின்ற இந்த வைரஸ் தொற்றியவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் முழுமையாகக் குணமடைந்துவிட வாய்ப்புண்டு என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலில் வழமைக்கு மாறான சொறி கடி,குறிப்பாகப் பிறப்பு உறுப்புப் பகுதிகளில்நமைச்சல் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களது ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு இங்கிலாந்தின் சுகாதாரப் பாதுகாப்பு முகவரகம் (Health Security Agency – UKHSA) பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

நிலையான வைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

Thanksha Kunarasa

யாழ் பல்கலைக்கழகத்தின் 35 வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது!

Thanksha Kunarasa

ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

Thanksha Kunarasa

Leave a Comment