உலகம் செய்திகள்

கொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

தான் கொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை அமெரிக்கா அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசிய இம்ரான் கான், அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், சுயநலத்துடன் மட்டுமே செயல்படும் நாடு அமெரிக்கா என குற்றம் சாட்டிய இம்ரான் கான், அந்த நாடு தனக்கு பலன் இருக்காது என்றால் எந்த நாட்டுக்கும் உதவாது என்றார்.

ஊடுருவல் இல்லாமல் பாகிஸ்தானை அமெரிக்கா அடிமைப்படுத்தி வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட இம்ரான் கான், ஆனால், அந்த நாட்டால் இந்தியாவிடம் அதிகாரம் செலுத்த முடியாது என்றார். ஏனெனில், இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையை கொண்டிருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசுதான் தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது என விமர்சித்த இம்ரான் கான், தற்போதைய ஆட்சியாளர்களால் அமெரிக்காவிடம் சிறிய அளவில்கூட அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரியை கடுமையாக விமர்சித்த இம்ரான் கான், பிலாவலும் அவரது தந்தை ஆசிப் அலி ஜர்தாரியும் தங்கள் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இது அமெரிக்காவுக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதற்காகவே வெளியுறவு அமைச்சர் பிலாவல் அடுத்த வாரம் அந்நாட்டிற்கச் செல்ல இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்த இம்ரான் கான், தான் கொல்லப்பட்டால் அதற்கு பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் பெயர்களுடன் ஒரு வீடியோவை தான் தயார் செய்து வைத்திருப்பதாகவும், தனக்கு ஏதும் நேர்ந்தால் அந்த வீடியோ வெளியாகும் என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

Related posts

காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் தாழிறக்கம்

Thanksha Kunarasa

கொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா !!

namathufm

மன்னார் அடம்பன் – உயிலங்குளம் வீதியில் திடீர் நேர்கை – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

namathufm

Leave a Comment