பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆட்சேபம் , வைரஸ் திரிபுகளின் பரவல் தொடர்ந்து கொண்டிருக்கையில் அடிப்படைப் பாதுகாப்புக் கவசமான மாஸ்க்கை ஒரேயடியாகக் கைவிடுவது ஆபத்தாகும் என்று ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் சிலர் எச்சரித்திருக்கின்றனர்.
வைரஸ் பரவல் தடுப்பு விதிகளில் எச்சசொச்சமாக இருந்த மாஸ்க் போன்ற கட்டுப்பாடுகளைப் பல நாடுகளும் முற்று முழுதாக நீக்கியுள்ளன.
பிரான்ஸில்பொதுப் போக்குவரத்துகளில் கட்டாயம்என்று இருந்து வந்த மாஸ்க், இனி மேல் அவரவர் விருப்பம் என்ற தெரிவுக்கு விடப்பட்டுள்ளது.
உல்லாசப் பயணங்கள் அதிகரித்து வரும் நிலையில் வான் போக்குவரத்துகளிலும் மாஸ்க் கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாஸ்க்கின் முக்கியத்துவத்தை ஒரேயடியாகக் கைவிடுவது நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.
இதேவேளை, மெற்றோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துகளில் நாளை திங்கட்கிழமை முதல் மாஸ்க் கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தாங்கள்அதனைத் தொடர்ந்தும் அணிய விரும்புவதாகப் பாரிஸ் பயணிகள் பலர் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
ஒமெக்ரோன் திரிபின் இரண்டு உப திரிபுகள் வரும் வாரங்களில் – மாதங்களில்-புதிய தொற்றலைகளை உருவாக்கக்கூடும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஐரோப்பிய நிலையம் (European Center for Disease Control and Prevention) சில தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆபிரிக்காவில் வேகமாகப் பரவுகின்ற ஒமெக்ரோனின் BA4, BA5 ஆகிய இரண்டு உப திரிபுகளும் வரும் வாரங்களில் ஐரோப்பாவில்ஆதிக்கம் செலுத்தும் திரிபுகளாக மாறி மருத்துவமனைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று அந்த அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.