ஆப்கானிஸ்தானில் உள்ள உணவகங்களில் கணவன்- மனைவி ஒன்றாக அமர்ந்து உணவருந்த தாலிபன் அரசு தடைவிதித்துள்ளது.
ஆப்கனை விட்டு அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான் படைகள் கைப்பற்றின. தாலிபான்களை கண்டு அஞ்சிய பொதுமக்கள் பலர் அந்த நாட்டின் எல்லை வழியாக வெளியேறும் சூழல் உருவானது, மேலும் பலர் உயிருக்கு பயந்து சரக்கு விமானத்தில் தொங்கிய படியே பயணித்த காட்சி காண்போர் நெஞ்சை உலுக்கியது.
பெண்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறை சட்டங்களை செயல்படுத்தி வரும் தாலிபான்கள் உலக நாடுகளின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள், தலை முதல் கால் வரை முழுமையாக மூடும்படியான பர்தா அணிந்து வெளியே வரவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஹெராத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் மேலாளர் அங்கு உணவருந்த வந்த தம்பதியை தனித்தனியாக உட்கார சொன்னதாக ஆப்கன் பெண் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதனை மேற்கோள்காட்டி, ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, உணவகங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக அமர வேண்டும் எனவும், கணவன் – மனைவியாக இருந்தாலும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெண்களை பூங்காக்களுக்குச் செல்லவும், மற்ற நாட்கள் ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்காக ஆண்கள் செல்லவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக உணவகத்தில் உணவருந்த வேண்டும் என்று தலிபான்கள் விதித்த சட்டத்தால் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.