ஜேர்மனியில் பிரதமர் மோடி மூன்று நாள் ஐரோப்பிய பயணத்தில் டென்மார்க், பிரான்ஸுக்கும் விஜயம்உக்ரைன் போரில் எந்த நாடும் வெற்றியீட்டப்போவதில்லை. நாங்கள் அமைதியையே நாடுகின்றோம். மோதலைமுடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டு கோள் விடுக்கிறோம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜேர்மனியின் புதிய சான்சிலர் ஒலாப் சோல்ஸுடன் பேச்சு நடத்திய பின்னர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
சமீபகால பூகோள அரசியல் நிகழ்வுகள்உலகின் அமைதியும் ஸ்திரத் தன்மையும் எவ்வளவு இலகுவாக உடையக் கூடிய நிலையில் இருந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. மோதலின் ஆரம்பத்திலேயே உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தோம். சகலருக்கும் இழப்புகளைத் தரவுள்ள இந்தப் போரில் எந்தத் தரப்புக்கும் வெற்றி வாய்க்கப் போவதில்லை – என்றும் மோடி தெரிவித்திருக்கிறார்.
மூன்று நாள் – மூன்று நாடுகளுக்கானவிஜயத்தை ஆரம்பித்துள்ள இந்தியப்பிரதமர் இன்று திங்கட்கிழமை ஜேர்மனியின் தலைநகர் பேர்ளினை வந்தடைந்தார்.அங்கு அவருக்கு மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.சான்சிலர் ஒலாப் சோல்ஸுடன் அவர் தனது முதலாவது அரசுமுறை நேரடிச் சந்திப்பை நடத்தினார். பேர்ளினில் வசிக்கும் இந்தியச்சமூகத்தவர்களையும் மோடி சந்தித்துஉரையாடினார்.மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய சான்சிலர் ஒலாப் சோல்ஸ், போரை நிறுத்துமாறு புடினுக்கு அழைப்புவிடுத்தார். “இந்தப்போரை நிறுத்துங்கள், இந்த முட்டாள் தனமான கொலைகளை நிறுத்துங்கள், உங்கள் படைகளைத் திரும்பப் பெறுங்கள்”என்று அவர் கோரினார்.
இந்திய அரசு உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை வெளிப்படையாகக் கண்டிக்காமல் ராஜீக நடுநிலையைப் பேணி வருகின்றது. ஐ. நா.சபையில் ரஷ்யாவைக் கண்டிப்பதற்காகவும் மனித உரிமைகள் சபையில் இருந்து மொஸ்கோவை வெளியேற்றுவதற்காகவும் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளில் இந்தியா கலந்து கொள்ளாமல் விலகி இருந்தது. கடந்த மாதம் முதல் அது ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகரித்திருக்கிறது. இந்தப் பின்னணியில் போரில் சிக்கியுள்ள ஐரோப்பாவுக்கு வருகை தந்துள்ளார் மோடி.
ஜேர்மனி,டென்மார்க், பிரான்ஸ் ஆகிய முக்கிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பைப் பகிரங்கமாகக் கண்டிக்கும் விடயத்தில் சர்வதேச அழுத்தத்தை இந்தியப் பிரதமர் எதிர் கொண்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஜேர்மனியில் இருந்து டென்மார்க் செல்லவுள்ள மோடி பிரதமர் Mette Frederiksen அம்மையாரைச் சந்திக்கிறார். பின்னர் அவர் அங்கு டென்மார்க், பின்லாந்து, சுவீடன், நோர்வே,ஐஸ்லாந்து தலைவர்களுடன் இரண்டாவது நோர்ட்டிக் – இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து திரும்பும் வழியில் பாரிஸில் அதிபர் மக்ரோனையும் சந்தித்துப் பேசவுள்ளார்.