இலங்கைக்கு 5000 மெற்றிக் தொன் அரிசி, 1040 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸை, சீனத் தூதுவர் கியூ சென்ஹொங் நேற்று சந்தித்துப் பேசியபோதே இந்த உதவிகளை அறிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, சீன – இலங்கை உறவு குறித்து நினைவுகூரப்பட்டன. தொடர்ந்து நாட்டின் சமூக, பொருளாதார நிலை குறித்து பேசப்பட்டன.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து தூதுவருக்கு பீரிஸ் விளக்கமளித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி மற்றும் கடன் சீரமைத்தல் விடயங்களை உடனடியாக சமாளிக்க அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்தார்.
சீனா நேரடியாகவும், செஞ்சிலுவை சங்கம் மூலமும் ஆதரவுகளை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்கும் என்று தூதுவர் கியூ சென்ஹொங் குறிப்பிட்டார்.
சீனாவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் இலங்கைக்கு 5000 மெற்றிக் தொன் அரிசியையும் (முன்னர் வழங்குவதாக உறுதியளித்த 2000 தொன் உள்ளடங்கலாக) உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தது. தவிர, 20 கோடி யுவான் பெறுமதியான – நம் நாட்டு மதிப்பில் சுமார் 1040 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களையும் வழங்க சீனா முன்வந்துள்ளது.
மேலும், சீனாவின் யுனான் மாகாணம் 15 இலட்சம் யுவான் – 7.8 கோடி இலங்கை ரூபாய் மதிப்பான உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்க உறுதியளித்துள்ளது.