உலகம் செய்திகள்

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் இந்த உலகம் ‘மானிட பேரழிவை’ சந்தித்து வருவதாக, உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி தொடர்ந்தால், உணவுப்பொருட்களின் அதிகப்படியான விலை ஏற்றத்தால், மில்லியன் கணக்கிலான மக்கள் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என டேவிட் மால்பஸ் தெரிவித்தார்.

உணவுப்பொருட்களின் விலையில் ‘கடும் ஏற்றமாக’ 37வீதம் அளவுக்கு விலை உயர்வு ஏற்படும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

இது ஏழைகளை பெருமளவு பாதிக்கும் என தெரிவித்துள்ள உலக வங்கி, ‘இந்நெருக்கடியால் அவர்கள் குறைவான உணவை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். மேலும் பள்ளிப்படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு அவர்களிடம் குறைவான பணமே இருக்கும்’ என தெரிவித்துள்ளது.

உலகளாவிய வறுமை ஒழிப்பு நிறுவனமான உலக வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரான மால்பஸ், பிபிசி பொருளாதார ஆசிரியர் ஃபைசல் இஸ்லாம் உடனான நேர்காணலில் பேசுகையில், ஏழைகள் மீதான இந்த தாக்கம் ‘இதனை நியாயமற்ற நெருக்கடியாக மாற்றியுள்ளது’ எனவும், ‘கோவிட் தொற்று விஷயத்திலும் இதுதான் உண்மை’ எனவும் அவர் தெரிவித்தார்.

‘இது மானிட பேரழிவு, அதாவது இந்த நெருக்கடியால் மக்கள் குறை ஊட்டச்சத்தை நோக்கித் தள்ளப்படுவார்கள். ஆனால், இதுகுறித்து எதுவும் செய்ய முடியாத, இந்நெருக்கடிக்கு தாங்கள் காரணம் இல்லாத அரசுகளுக்கு இது அரசியல் சவாலாகவும் மாறும். உணவுப்பொருட்களின் விலை உயர்வதை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்’ என வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கி கூட்டத்தில் மால்பஸ் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வு ஆழமான மற்றும் விரிவான தாக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், ‘அனைத்துவிதமான எண்ணெய் மற்றும் தானியங்களின் விலைகளையும் இந்த நெருக்கடி பாதித்துள்ளது. மேலும், சோளப்பயிர் உள்ளிட்ட மற்ற பயிர்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏனெனில், கோதுமை விலை உயரும்போது இவற்றின் விலையும் உயரும்’ என கூறினார்.

அனைவருக்கும் தேவையான உணவு இந்த உலகில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், உணவுப்பொருட்களின் உலகளாவிய கையிருப்பு அதிகளவில் இருப்பதாகவும் ஆனால், உணவு எங்கு தேவையோ அங்கு அவற்றை கொண்டு செல்வதற்கான பகிர்ந்தளிக்கும் அல்லது விற்பனை நடைமுறைகள் தேவை என தெரிவித்தார்.

Related posts

வடக்கில் புத்தர் சிலைகளை வைத்து இனியும் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த முடியாது- சுமந்திரன் எம்பி

Thanksha Kunarasa

மிகப் பெரிய கஞ்சாத் தோட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயின் பொலிஸ்!

Thanksha Kunarasa

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு .

Thanksha Kunarasa

Leave a Comment