புதிய இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (19) பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கலாநிதி சுரேன் ராகவன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கல்விச் சேவை மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அவர் ஏற்கனவே பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவருடைய இராஜாங்க அமைச்சர் பதவியில் நேற்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஆடை கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக மொஹமட் முஷாரப் முதுநபீன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.