ஆட்சி மாற்றத்திற்கான வெளிநாட்டு சதியின் மூலம் பாகிஸ்தான் மக்கள் மீது, ஊழல் அரசாங்கம் திணிக்கப்பட்டிருப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெளிநாட்டு சதி காரணமாக தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக இம்ரான் கான் குற்றம்சாட்டுகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள புதிய அரசுக்கு எதிராக, உண்மையான சுதந்திரம் என்ற பெயரில் இம்ரான் கான் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களிடம் நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ஆட்சி மாற்றத்திற்கான வெளிநாட்டு சதியின் மூலம் பாகிஸ்தான் மக்கள் மீது ஊழல் அரசாங்கம் திணிக்கப்பட்டிருப்பதாகவும், இது 22 கோடி பாகிஸ்தான் மக்களை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
அரசுக்கு எதிரான பிரசாரத்துக்காக பி.டி.ஐ. கட்சி, வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்களிடம் இருந்து நிதி திரட்ட இணையத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு சதியை முறியடித்து, தேர்தல் நடத்த அழுத்தம் கொடுப்போம். பாகிஸ்தான் மக்கள் தங்கள் அரசை தீர்மானிக்கட்டும் என்று இம்ரான் கான் கூறி உள்ளார்.