‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் போராட்டம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகின்றது.
இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று ஜனநாயகத்துக்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ். பண்ணைக் கடற்கரையில் இன்று மாலை 6.30 மணியளவில் தீப்பந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.