இலங்கை உலகம் செய்திகள்

2021-இல் உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் விபரத்தை வெளியிட்ட ஶ்ரீலங்கன் விமான நிறுவனம்

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து உகாண்டாவின் Entebbe சர்வதேச விமான நிலையத்திற்கு 102 தொன் அச்சிடப்பட்ட காகிதங்களை கொண்டு செல்வதற்கான முன்பதிவு கிடைத்ததாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமானப் பொதி முழுமையாக வணிக செயற்பாடாக அமைந்ததுடன், அதனூடாக விமான நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகாண்டா அரசாங்கத்தின் முன்பதிவிற்கமைய, பாதுகாப்பான அச்சிடும் செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, அச்சிடப்பட்ட உகாண்டா நாட்டின் நாணயத்தாள்களை கொண்டு செல்வதற்காக பிரித்தானியாவின் பொருட்கள் போக்குவரத்து நிறுவனமொன்றின் விமானம் ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 தொன்களுக்கு அதிக பொருட்களை ஏற்றிய ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்ந்தும் மூன்று தடவைகள் Entebbe நோக்கி பயணித்ததாக கடந்த வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதி தகவல் வௌியானது.

இலங்கை விமானிகள் சங்கம், சமூக வலைத்தளங்களில் வௌியிட்ட தகவல்களுக்கு அமைய இந்த விடயம் வௌிவந்தது.

இந்த தகவலை தவறாக சித்தரித்து பல்வேறு விடயங்கள் தெரிவிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளது.

COVID நிலைமைக்கு மத்தியில் செயற்படாமலிருந்த நிறுவனத்தின் விமானம், பிரித்தானியாவின் பொருட்போக்குவரத்து நிறுவனமொன்றினால் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டினால் அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடிந்ததாக ஶ்ரீலங்கன் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

உகாண்டாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பிரத்தியேக ஜெட் விமானம் ஒன்றில் திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்டமை இதன் அண்மித்த சம்பவமாகும் .

அதிக விலைக்கு வாடகைக்கு பெறப்படும் இந்த ஜெட் விமானம் பிரதமரை அழைத்து செல்வதற்காக, உகாண்டாவின் Entebbe விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது.

இதனிடையே, சர்வதேச நாடுகளில் உகாண்டா தற்பொழுது நிதித்தூய்தாக்கல் உள்ளிட்ட நிதி குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

உகாண்டாவின் நிதி கொடுக்கல் வாங்கல்களை கறுப்புப்பட்டியலில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக Financial Action Task Force எனப்படும் FATF அமைப்பு தெரிவித்துள்ளது.

நிதி தூய்தாக்கல் உள்ளிட்ட நிதிக்குற்றங்களை தடுக்க முடியாமல் போனமையினால் குறித்த அமைப்பு இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

நிதிப்பாதுகாப்பு தொடர்பில் அபாயம் மிகுந்த நாடாகவும் உகாண்டாவை ஐரோப்பிய ஒன்றியம் பெயரிட்டுள்ளது.

நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இவ்வளவு பிரச்சினைகளை கொண்டுள்ள உகாண்டாவுடன், எமது நாட்டு மக்களின் பணத்தினால் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மக்கள் அறியவேண்டியது அவசியமல்லவா என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஜனாதிபதியால் மீண்டும் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

Thanksha Kunarasa

இம்ரான்கான் கட்சியின் 50 மந்திரிகள் மாயம்

Thanksha Kunarasa

ரஷ்ய படையினரின் உறவுகளுக்கு புடினின் செய்தி

Thanksha Kunarasa

Leave a Comment