மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெருக்கடியை ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் தீர்த்து வைக்க ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இரசாயன உரத்தை தடை செய்வதற்கான நேரம் இதுவல்ல, எனவே உர மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளோம் என்றார்.
நாட்டு மக்களை இந்த நிலைக்கு ஆளாக்குவதற்காக நாங்கள் போரை முடித்தோம், மக்களை வரிசையில் நிறுத்துவதற்காக நெடுஞ்சாலைகளை அமைத்தோம். அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக நாங்கள் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கத் தொடங்கினோம், ஆனால் கடந்த அரசு. அதை நிறுத்தியது. அது தான் உண்மை” என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நெருக்கடிக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயே காரணம் என்றும், அரசாங்கம் என்ற வகையில் பொறுப்பை ஏற்று, பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு போராட்டம் நடத்தும் இளைஞர்கள், இலங்கை தேசியக் கொடியை நாட்டில் எங்கும் ஏற்றுவதை உறுதி செய்தது தமது அரசாங்கம் என்பதை நினைவில் கொள்ளுமாறும் தேசத்திற்காக கடமையாற்றும் இலங்கை காவல்துறை மற்றும் முப்படையினரை அவமதித்து துன்புறுத்துவதை தவிர்க்குமாறு அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
படையினரின் தியாகங்களினால் தான் இன்று இளைஞர்கள் சுதந்திரமாக போராட்டம் நடத்துவதற்கும் பயணிப்பதற்கும் காரணம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க படையினர் பெரும் தியாகங்களைச் செய்தார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.
மக்கள் தெருக்களில் போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நொடியும் நாட்டிற்கு முக்கியமான அந்நியச் செலாவணி டொலர் வருவாயை இழப்பதாக அவர் எச்சரித்தார். நாட்டை அதன் தற்போதைய நிலையில் இருந்து காப்பாற்றுவது நமது பொறுப்பு” என்று கூறிய பிரதமர், தைரியமும் உறுதியும் உள்ள அனைவரையும் இந்த செயல்பாட்டில் ஈடுபட அழைப்பதாகவும், பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் மக்களை வலியுறுத்தினார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அரசாங்கம் பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும், அவர்கள் அதை செய்யவில்லை. கட்சியைப் பற்றி சிந்திப்பதை விட, பொருளாதாரத்தை வலுப்படுத்த முன் வாருங்கள்” என்று பிரதமர் கூறினார்.
2010 ஆம் ஆண்டு தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டங்களை முன்னாள் அரசாங்கம் இடைநிறுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.எரிபொருள், எரிவாயு மற்றும் இதர தேவைகளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையிலும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து தனக்குத் தெரியும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.