முதற் சுற்று வாக்களிப்பின் இறுதிமுடிவுகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மக்ரோன் 27.84% வீதம், மரின் லூ பென் 23.15% வீதம்மெலன்சோன் 21.95%வீதம் வாக்குகளைபெற்றுள்ளனர். லூ பென்னுக்கும் மூன்றாம் இடத்தில் உள்ள மெலன்சோனுக்கும் இடையில் 421,420 வாக்குகள் வித்தியாசம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று BFM தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய மக்ரோன், தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற எல்லா வேட்பாளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்த விரும்புவதாகக் கூறியிருக்கிறார். கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக அதிகரிப்பது உட்பட எத்தகைய பொருளாதாரச் சீர்திருத்தங்களும் மக்கள் கருத்தறியும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்பதைக் கோடி காட்டினார்.
பொது சன வாக்கெடுப்பை (referendum) அவர் நிராகரிக்கவில்லை. “ஓய்வூதியச் சீர்திருத்தம் ஒரே இரவில் வந்து விடாது. அதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்த விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார். மரின் லூ பென்னுடன் நேரடி விவாதத்துக்குச் செல்வாரா என்று கேட்டபோது,”லூ பென்னை ஓர் அரசியல் தலைவராகமதிக்கிறேன். அவரது கொள்கைகளை மட்டுமே எதிர்க்கிறேன் “என்று மக்ரோன் பதிலளித்துள்ளார்.
இரண்டாவது சுற்றுக்கு முன்பாகத் தனது கடும் போக்குத் தன்மையைத் தணிப்பது போன்ற சில கருத்துக்களை லூ பென் வெளியிட ஆரம்பித்துள்ளார். குறிப்பாகத் தனது ஐரோப்பிய எதிர்ப்பு வாதத்தைத் தூக்கிப் பிடிப்பதைத் தவிர்த்து வருகிறார். ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தனது இலக்கு அல்ல என்று கூறியிருக்கிறார்.
அத்தியாவசியப் பொருள்கள் உட்பட நூறு வகையான பொருள்களை வரி ஏதும் இல்லாமல் (0% VAT) மக்களுக்கு வழங்கப் போவதாக சலுகை அறிவிப்பு ஒன்றையும் அவர் விடுத்திருக்கிறார். தீவிர வலதுசாரி மரின் லூ பென்னுடன் கடும் போட்டியை எதிர்கொள்கின்ற மக்ரோனுக்கு இறுதிச் சுற்று இந்தத் தடவை கடந்த 2017 போன்று மிக இலகுவாக வெற்றி வாய்ப்பை வழங்கி விடாது. சவாலுடனேயே அவர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டி இருக்கும் என்று தேர்தல்க்கள நிலைவரத்தை அவதானிப்போர் மதிப்பிடுகின்றனர்.
இதனை நேற்று முதல் சுற்றில் முதலிடம் பெற்றுத் தெரிவாகிய பின்னர் செய்தி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் மக்ரோன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார். “ஆட்டம் இன்னும் நடக்கவேயில்லை. அது இனி மேல் தான்” – என்று அவர் வரவிருக்கும் இரண்டாவது சுற்றில் எதிர் கொள்ளக் கூடிய சவாலை விவரித்தார்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.