உலகம் செய்திகள்

ஜாக் சிராக்கிற்குப் பின்னர் – – – – – இரண்டாவது முறையும் தெரிவாகும் பிரெஞ்சு அதிபராகிறார் மக்ரோன்?

லு பென்னைத் தோற்கடிக்குமாறு முக்கிய எதிர்க்கட்சிகள் அழைப்பு!

லூ பென்னுக்கு ஆதரவு தெரிவித்து எரிக் செமூர் எதிர்பாராத அறிவிப்பு!

பிரான்ஸில் கடந்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் உள்ள அதிபர் ஒருவர் இரண்டாவது முறையும் தேர்தலில் வெல்லும் கட்டத்தை எட்டியிருக்கிறார். மறைந்த முன்னாள் அதிபர் ஜாக் சிராக்கிற்குப் பிறகு மக்ரோன் அந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

1995 இல் அதிபர் பதவிக்கு வந்தவர் ஜாக் சிராக். (Jacques Chirac) இருபது ஆண்டுகளுக்கு முன்பாக 2002 இல் அவர் இரண்டாவது தடவையாகவும் அடுத்த தவணைக் காலத்துக்கு வெற்றியீட்டியிருந்தார். அதன் பிறகு பதவிக்கு வந்த அதிபர்கள் நிக்கலஸ் சார்க்கோசி, பிரான்ஷூவா ஹொலன்ட் இருவருமே முதல் தவணைக் காலத்துடன் விலக நேர்ந்தது.

மக்ரோன் முதற் சுற்று வாக்கெடுப்பில் சுமார் முப்பது சதவீத வாக்குகள் பெற்று வென்றிருப்பதை அவரது ஆதரவாளர்கள் பெரும் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர். எதிரணி வேட்பாளர்கள்பலரும் ஏப்ரல் 24 இறுதிச் சுற்றில் மக்ரோனுக்கே வாக்குகளைச் செலுத்துமாறு தங்களது ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். அதனால் மக்ரோனின் இறுதி வெற்றி வாய்ப்புப் பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.

சோசலிஸக் கட்சியின் வேட்பாளர் ஆன்கிடல்கோ, பிரதான எதிர்க் கட்சியான ரிப்பப்ளிக்கன் வேட்பாளர் வலெரி பெக்ரெஸ், பசுமை வேட்பாளர் யானிக் ஜாடோட் ஆகியோர் மரின் லூ பெனைத் தோற்கடிக்குமாறு தங்கள் ஆதரவாளர்களுக்கு உடனடியாகவே அறை கூவல் விடுத்துள்ளனர்.

மூன்றாவது இடத்தைப் பெற்ற தீவிர இடது சாரியான ஜோன் லூக் மெலன்சோன், மக்ரோனுக்கு ஆதரவைத் தெரிவிப்பதைத் தவிர்த்து மரின் லூ பென்னைத் தோற்கடிக்குமாறு தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இறுதிச் சுற்றில் மக்ரோனை எதிர்கொள்கின்ற மரின் லூ பென், மக்ரோனை வெறுப்பவர்கள் அனைவரையும் தனக்கு வாக்களிக்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

மரின் லூ பெனின் தீவிர எதிரியாகக் களம் புகுந்த மற்றொரு தீவிர வலது சாரியான எரிக் செமூர், எதிர்பாராத விதமாக லூ பென்னுக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களைக் கேட்டிருக்கிறார். இதனால் இறுதிச் சுற்றுக்கான களம் மிகவும் பரபரப்படைந்துள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சியில் அசத்தும் காஜல்

Thanksha Kunarasa

மெட்ரோ சுரங்கத்தில் உக்ரைன் கீவ் நகரில் பிறந்த பெண் குழந்தை !

namathufm

அமெரிக்காவில் மீண்டும் உருவான நரகத்திற்கான வழி நீர்ச்சுழி

Thanksha Kunarasa

Leave a Comment