மிரிஹான எதிர்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் ஒன்லைன் கண்காணிப்பு மூலம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மிரிஹான பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு பஸ்கள் எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவத்தின் போது கிடைத்த CCTV காட்சிகளின் அடிப்படையில் , பஸ்ஸிற்கு தீ வைத்த நபரின் உருவத்தை ஒத்த ஒரு நிழற்படம் வரையப்பட்டுள்ளது.
இதனூடாக சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
மிரிஹான, பரணகொட்டாவ வீதி, பெங்கிரிவத்த சந்தியில் அமைதியின்மையுடன் செயற்பட்டு, பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததுடன், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.