யுக்ரேனில் நிகழ்ந்துவரும் அதிகப்படியான கொலைகளை நிறுத்த இந்த உலகம் எதிர்வினையாற்ற வேண்டும் என பிரிட்டன் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப்படைகள் யுக்ரேனில் மக்களை கொல்வதாக வெளியாகும் தகவல்களை, போஸ்னியாவில் 1995ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனப்படுகொலையுடன் அவர் ஒப்பிட்டார்.
யுக்ரேன் தலைநகர் கீவை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரஷ்யப்படைகள் வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில், ரஷ்யப்படைகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் சடலங்கள், அழிந்த வீடுகள் மற்றும் எரிந்த கார்கள் உள்ளிட்டவற்றை யுக்ரேனிய படைகள் ஊடகவியலாளர்களுக்குக் காட்டி வருகின்றனர்.
ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் படுகொலைகள் இங்கு நடைபெற்றுள்ளன. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்று நிகழ்ந்ததை நாங்கள் பார்க்கவில்லை’ என ஜாவித் தெரிவித்தார்.
ஜூலை 1995 இல், போஸ்னிய செர்பியப் படைகள், ஸ்ரெப்ரெனிகாவில் ஐக்கிய நாடுகளின் ‘பாதுகாப்பான மண்டலத்தை’ கைப்பற்றி, ஆண்களையும் சிறுவர்களையும் கொன்று குவித்தது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிக மோசமான கொடூரமான படுகொலையாக காணப்படுகிறது.
இன்னும் பல வருடங்கள் கழித்து ஐரோப்பாவில் நடந்த மற்றொரு இனப்படுகொலையை நான் நினைவுகூர விரும்பவில்லை. நமக்கு அதிகாரம் உள்ளது. இதனை நிறுத்த உலகத்திற்கு அதிகாரம் உள்ளது. உலகம் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும்’ என ஜாவித் தெரிவித்தார்.