உக்ரைனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் ஒரு மாதத்தை தாண்டியும் நீடித்து வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனின் புச்சா நகர் முழுவதும் சடலங்கள் சிதறிக்கிடந்ததாக அந்நகர மேயர் தகவல் தெரிவித்திருந்தார்.
குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்கள் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருந்தது குறித்து வெளியான புகைப்படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த சமீபத்திய அறிக்கைகள் ஆழ்ந்த கவலையளிப்பதாகவும், படுகொலைகளை கண்டிப்பதாகவும் ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா ஆதரிப்பதாகவும் இந்தியா சார்பில் உரை நிகழ்த்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.