ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மேலும், 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை, திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியை ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதன் காரணமாக தமது பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.