இலங்கை செய்திகள்

ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் நிலையில் அவசரகாலச் சட்டம் நள்ளிரவு நீக்கம்!

நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுதேர்தலை அறிவிக்க அதிபர் திட்டம்? சிறிலங்காவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகாலச் சட்ட விதிகளை அதிபர் கோட்டாபய ராஜபக்ச திடீரென நீக்கியிருக்கிறார். அதிபரது தனிப்பட்ட வாசஸ்தலத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதை அடுத்துகடந்த முதலாம் திகதி நாடெங்கும் அவசரகாலச் சட்ட விதிகளை நடை முறைப்படுத்துகின்ற அதி விசேட அரசிதழ் ஒன்றை கோட்டாபய விடுத்திருந்தார்.

ஆனால் இன்னமும் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தணியாத நிலையில் அவசரகாலச் சட்ட விதிகளை அவசரப்பட்டு நீக்குகின்ற அறிவிப்பை இன்றிரவு அதிபர் வெளியிட்டிருக்கிறார் எனக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமைதியான வழிமுறைகளில் மக்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் தங்கள் ஆட்சேபத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவின் அரசாங்கத்தின் அமைச்சர்வையில் பிரதமர் தவிர்ந்த அனைவருமே பதவி விலகிவிட்டனர். அமைச்சுப் பொறுப்புகளைப் பங்கிட முன்வருமாறு சகல கட்சிகளுக்கும் அதிபர் விடுத்த வேண்டுகோளைப் பிரதான எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. கோட்டாபய உட்பட ராஜபக்ச பரம்பரையினர் அனைவருமே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

நாடாளுமன்றம் இன்று கூடிய போது கோத்தாபயவின் கூட்டணி அரசில் இடம் பெறும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சுமார் 42 பேர் தனித்து-சுயாதீனக் குழுக்களாகப்-பிரிந்ததை அடுத்து ஆளும் தரப்பு பெரும்பான்மையை இழந்துள்ளது. மகிந்த ராஜபக்ச பதவிவிலகி புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அதிபர் கோட்டாபயவைப் பதவி விலகுமாறு கேட்டு நாடெங்கும் புதிதாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன கொழும்பு நாடாளுமன்றத்துக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தினரிடையே இராணுவ வீரர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர் மோட்டார் சைக்கிள்களுடன் நுழைந்து மிரட்டல் விடுத்தனர் என்று கூறப்படுகிறது. அதன் போது அங்கு பொலீஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் அது தொடர்பாக விசாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அவசரகாலச் சட்ட விதிகளை அதிபர் எதற்காக உடனேயே நீக்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்து நேரடியாகவே பொதுத் தேர்தலை அறிவிக்கின்றநோக்கத்துடனேயே அவசரகாலச் சட்டவிதிகளை அதிபர் கோட்டாபய நீக்கியுள்ளார் என நம்பப்படுகிறது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்த செல்வந்தர்கள்

Thanksha Kunarasa

இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!

editor

Leave a Comment