பிந்திய கருத்துக் கணிப்பு இறுதிக் கட்டத் தேர்தல் பரப்புரைகள்சூடுபிடித்துள்ளன. அதிபர் தேர்தலின் முதலாவது சுற்றுக்கு இன்னும் சரியாகஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில்தனது ஒரேயொரு முதலாவது பரப்புரைபொதுக்கூட்டத்தை மக்ரோன் இன்றுமாலை பாரிஸ் லா-டிபென்ஸ் அரேனா(la Défense Aréna) அரங்கில் நிகழ்த்தியிருக்கிறார்.35 ஆயிரம் பேர் கூடிய அந்த அரங்கில் சுமார் இரண்டரை மணிநேரம் அவர் உரையாற்றினார்.
மிக நீண்ட அந்த உரையில் முன்னாள் அதிபர்கள் பிரான்ஷூவா மித்ரோன், பிரான்ஷூவா ஹொலன்ட் நிக்கலஸ் சார்க்கோசி போன்றவர்களது பிரபல வாசகங்களை மேற்கோள் காட்டிப்பேசினார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்ரோனின் வெற்றி வாய்ப்புத் தொடர்ந்தும் ஸ்திரமாக இருப்பதைக் கணிப்புகள் காட்டியுள்ளன. முதற்சுற்று வாக்களிப்பு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் எந்த ஒரு வேட்பாளரும் தனித்து 50 வீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெறாதவிடத்து கூடிய வாக்குகள் பெற்ற முதல் இருவேட்பாளர்கள் இரண்டாவது சுற்றை எதிர் கொள்வர். ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுக்கு மக்ரோனுடன் தீவிர வலதுசாரி மரின் லூ பென் போட்டிக்கு முன்னேறுவார் என்றும்அவருக்கும் மக்ரோனுக்கும் இடையேமிக நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் ஆகப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
“இந்த முறை மரின் லூ பென் எலிஸேமாளிகை செல்லக் கூடும். அது நடக்கலாம்” – என்று கடந்த வாரம் முன்னாள்பிரதமர் எத்துவா பிலிப் பத்திரிகைச் செவ்வி ஒன்றில் கூறியிருந்தார். தீவிர வலது சாரிகளிடையே பிளவு உள்ள போதிலும் இறுதி நாட்களில் லூ பென்னின் செல்வாக்கு அதிகரித்து வருவது பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஓய்வூதிய வயதை 65 ஆக அதிகரிக்கின்ற திட்டம் மக்ரோனின் வாக்கு வங்கியில் தாக்கம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அவரது அரசு கோரோனாத் தடுப்பூசித் திட்டம் உட்பட அரசின் சில நிர்வாக விடயங்களுக்கு நிபுணத்துவ ஆலோசனை பெறுவதற்காக மெக்கின்ஸி (McKinsey) என்னும் அமெரிக்க நிறுவனத்திடம் ஆலோசனைகளைப் பெற்றதில் பெருமளவு அரச நிதிவிரயம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது.
மெக்கன்ஸி என்ற அந்த விவகாரத்தை (McKinsey Affair) எதிரணி வேட்பாளர்கள் மக்ரோனைத் தாக்குவதற்கான கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.ஆங்கில மொழி பேசுகின்ற நாடுகளில் இவ்வாறு அரசுகள் தமக்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வெளியே இருந்து தனிப்பட்ட நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்வது வழமை. ஆனால் பிரான்ஸில் அத்தகைய ஆலோசனைகளை நாடுவதும் அதற்காகப் பெருமளவு நிதி விரயம் செய்வதும் அரிதான நிகழ்வு ஆகும்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.