உலகம் செய்திகள்

உக்ரைன் கீவ் பகுதிகளிலிருந்து ரஷ்யப் படைகள் முற்றாக வாபஸ்.. தெற்கு ஒடெசா துறைமுக நகர் மீது புதிதாகத் தாக்குதல்கள் !!

உக்ரைன் தலைநகர் அமைந்துள்ள பிராந்தியம் அடங்கலாக வட பகுதியில் இருந்து ரஷ்யா தனது படைகளை மீளஅழைத்துள்ளது. கீவ் புறநகர் பகுதிகளை முற்றுகையிட்டிருந்த படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்துப் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். புற நகரத் தெருக்கள் எங்கும் அழிவுண்ட பிரதேசங்களாகக் காட்சியளிப்பதை அங்குள்ள செய்தியாளர்கள்தெரித்துள்ளனர்.

ரஷ்யப் படைகளின் சேதமடைந்த டாங்கிகளும் வாகனங்களும் வீதிகளில் வரிசையில் கிடக்கின்றன. அங்காங்கே மனித சடலங்களும் தரையில் கிடப்பதை படங்கள் காட்டுகின்றன. பூட்சா (Boutcha) என்ற புறநகர வீதி ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் வரிசையில் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகள் புரிந்த மிலேச்சத்தனமான படுகொலை அது என உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

தலைநகர் கீவைக் கைப்பற்றுகின்ற முற்றுகை ரஷ்யப் படைகளுக்குப் பலத்த இழப்புக்களுடன் கூடிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டுள்ளது என்று போரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உக்ரைன் படைகளது “சூட்டுவலு” மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுதங்களால் மிக உச்ச அளவில் இருந்தமையே ரஷ்யாவுக்குப் பலத்த இழப்புகளைக் கொடுத்துள்ளது.வடக்கில் இருந்து திருப்பி அழைத்த தனது படைகளைக் கொண்டு தெற்கிலும் கிழக்கிலும் தாக்குதல்களைத் தீவிரமாக்குவதற்கு மொஸ்கோ முயற்சித்து வருகிறது.

போரின் 36 ஆவது நாளான இன்று (ஞாயிறு) நாட்டின் தென் மேற்கே அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒடெசா(Odessa) துறைமுக நகரம் மீது ரஷ்யா கடும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அங்குள்ள எரிபொருள் குதங்களை தரை,கடல் வழி மூலமாக ஏவுகணை கொண்டு தாக்கி அழித்து விட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போர் ஒரு புறம் நீடிக்கும் அதே சமயம் துருக்கியின் மத்தியஸ்தத்தோடு நடைபெறும் பேச்சுக்களில் உக்ரைன் முன்வைத்த அமைதி யோசனைகளை மொஸ்கோ பிரதிநிதிகள் “வாய் மூலம்” ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

*நேட்டோவில் உக்ரைன் இணையாது

*ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையலாம்.

*கட்டம் கட்டமாக ரஷ்யா படைகளைத் திரும்பப் பெறும்

*கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள டொன்பாஸ் பிராந்தியத்துக்குத் தன்னாட்சி

*கிரீமியா தொடர்பில் உக்ரைன் விலகி இருக்கும்

*அமெரிக்கா தவிர்ந்த – நேட்டோவில் இல்லாத ஒரு நாட்டில் ஷெலான்ஸ்கி – புடின் அதிபர்கள் சந்திப்பு

இந்த யோசனைகளை உள்ளடக்கிய திட்டத்தையே உக்ரைன் முன்வைத்திருந்தது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Thanksha Kunarasa

முச்சக்கரவண்டி மீது பஸ் மோதி கோர விபத்து

Thanksha Kunarasa

உணவு விஷமானதால் 325 பேர் மருத்துவமனையில்!

Thanksha Kunarasa

Leave a Comment