நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், ‘பதவி விலக மாட்டேன்,’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ — இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.இயில் கடந்த மாதம் 28-ல் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீது நாளை மறுநாள் வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்நிலையில், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த எம்.க்யூ.எம். கட்சி மற்றும் பலுசிஸ்தான் அவாமி கட்சி ஆகியவை எதிர் தரப்புக்கு தாவியுள்ளன.
மேலும், பிரதமர் இம்ரான் கானின் சொந்தக் கட்சி எம்.பிக்கள் சிலரும் வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக ஓட்டளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பெரும்பான்மையை இழந்து விட்டதால், அவர் பதவி விலகுவார் என பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. அலுவல் குறிப்பில் நான்காவது அம்சமாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், பார்லிமென்ட் கூடியதும் வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. இதையடுத்து, நாளை மறுநாள் காலை 11:00 மணிவரை பார்லிமென்டை ஒத்திவைத்து, துணை சபாநாயகர் காசிம் சூரி உத்தரவிட்டார். அதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடக்கவில்லை.
இந்நிலையில் நாட்டு மக்களிடையே, தொலைக்காட்சி’ வாயிலாக நேற்று உரையாற்றிய இம்ரான் கான், ‘நம் நாட்டுக்கு எதிராக சில வெளிநாடுகள் சதி செய்கின்றன.’அதன் கைக்கூலிகளாக இங்கு சிலர் உள்ளனர். எப்போதும் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டேன். இறுதிவரை போராடுவேன். பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை’ என்றார்.