பிரான்ஸில் இராணுவத்தின் புலனாய்வுப் பணிப்பாளர் பதவி விலகியுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனரல் எரிக் விடாட் (Eric Vidaud) கடந்த ஆண்டு நடுப் பகுதியிலேயே புலனாய்வுத்துறைப் பணியகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். “போதிய விளக்கம் அளித்தல் மற்றும் துறைசார் அனுபவக்குறைவு” போன்ற விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளன என்று பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் அவரது பதவி விலகலை இராணுவத் தலைமை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. எல்லையில் படைகளைக் குவிக்கத் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கப் போகின்றது என்பதை அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் புலனாய்வு சேவைகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன. ஆனால் பிரான்ஸின் உளவுத்துறை போர் மூளப் போகிறது என்பதற்கான சாத்தியங்களைக் குறைவாகவே மதிப்பிட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜெனரல் எரிக் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கி விவகாரத்தில் பாரிஸ் ஏமாற்றமடைய நேரிட்டது. பல பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா பிரான்ஸின் காலை வாரவுள்ளது என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவதில் பிரான்ஸின் உளவுத்துறை தவறவிட்டது என்ற குற்றச்சாட்டை அவர் அச் சமயம் எதிர் கொள்ள நேரிட்டது. ஆயினும் ஜெனரல் எரிக் விடாட்டின் பதவிக்குரிய பணி நாட்டின் படை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டதே தவிர வெளிநாடுகளது போர்களை எதிர்வு கூறுவது அல்ல என்று வேறு சில இராணுவ வட்டாரங்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளன.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் மீது குறை சுமத்துவது இலகுவானது. ஆனால் உண்மையில் அதற்கான பொறுப்பைச் சகல உளவு சேவைகளின் சமூகமே ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இராணுவ ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். அதிபர் மக்ரோன் புடினுடன் அடிக்கடித் தொடர்புகளைப் பேணி வருகின்ற ஐரோப்பியத் தலைவராக விளங்குகிறார். கடந்த பெப்ரவரி 24 அன்று ரஷ்யப்படை நடவடிக்கை தொடங்கிய பிறகுபுடினுடன் ஒரு டசினுக்கும் அதிக தடவை தொலைபேசியில் அவரோடு பேசியுள்ளார் மக்ரோன்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.