கடந்த இரு வாரங்களில் சிறுவர்கள் பலரிடையே ஏற்பட்ட சில நோய்க் குறிகளுக்கு குளிரில் பேணப்பட்ட ஒருவகை பீஸ்சா (frozen pizzas) மூலம் தொற்றிய ஈ-கோலை பக்ரீரியா (Escherichia coli bacteria) காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து குறிப்பிட்ட பீஸ்சா உணவை உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடைகளிலும் வீடுகளிலும் இருந்து அவற்றை அப்புறப்படுத்தி அழிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் இந்த அவசர அறிவுறுத்தல்களை விடுத்திருக்கிறார்.
பாரிஸில்ஒன்பது சிறுவர்கள் உட்பட நாடு முழுவதும் 12 பிராந்தியங்களில் மொத்தம்75 சிறுவர்களில் ஈ-கோலை பக்ரீரியாவுடன் தொடர்புடைய சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும் hemolytic uremic syndrome-HUS நோய்க் குறிகள் தோன்றிஉள்ளன. அதற்கும் pizzas surgelées Buitoni என்ற விற்பனைப் பெயருடைய குளிரில் பேணிய பீஸ்சா(pizza) உணவுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நெஸ்லே (Nestlé) தயாரிப்பான “pizza surgelée Fraîch’up de la marque Buitoni” பீஸ்சா வகைகளை வீடுகளில் குளிரூட்டியில் வைத்திருப்போர் அவற்றை வீசி விடுமாறு கேட்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் நிகழ்ந்த இரு சிறுவர்களது மரணங்களுக்கு இந்த பக்ரீரியாவே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அது தொடர்பான மருத்துவ ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஈ-கோலை (Escherichia coli bacteria) பொதுவாக உணவு, தண்ணீர் என்பவற்றில் காணப்படுகின்ற ஆபத்தில்லாத பக்ரீரியா ஆகும். ஆயினும் அது சில சமயங்களில் வயது குறைந்தவர்களில் சிறுநீரகப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.