7 பேர் விடுதலை தீர்மானம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து தமிழ்நாடு அரசு, விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஒன்றிய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நளினி தன்னை விடுதலை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரவை தீர்மானத்தை 42 மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பது சட்டத்திற்கு விரோதமான செயல் என நளினி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து, எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், பேரறிவாளனின் வழக்கு மட்டுமே குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா, அல்லது 7 பேரின் வழக்குகளும் அனுப்பப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.