இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள எரிபொருளின் அளவை பொறுத்து எதிர்காலத்தில் மின்வெட்டு நேரத்தை மேலும் நீடிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர, மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு மாத்திரமே போதுமான எண்ணெய் உள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இப்போது எங்களிடம் உள்ள எரிபொருளின் அளவின்படி, இன்றைய தினம் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். இந்த சூழ்நிலை தொடர்ந்தால் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும்.
ஏனெனில் மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே எரிபொருள் உள்ளது. அதன்படி மின்வெட்டு அளவை மேலும் அதிகரிக்க வேண்டும். எமக்கு எரிபொருளை பெற்றுத் தந்தால் எம்மால் மின்சாரத்தை பெற்றுத் தர முடியும். எமக்கு எரிபொருளை விரைவாக வழங்குமாறு அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் தெளிவாகக் கேட்டுக் கொள்கிறோம்.
அப்போது முடிந்தவரை மின்வெட்டை குறைக்கலாம். நமக்கு தற்போது இருக்கும் பிரச்சனை நீர்மின் நிலையங்கள் இல்லாதது.
தற்போது நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அப்படியிருந்தும், பகலில் 300 மெகாவோட் மற்றும் இரவில் 700 மெகாவோட் வழங்க எம்மால் முடிந்துள்ளது.
இதேநேரம், எதிர்வரும் புத்தாண்டில் மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுமா? ‘என கேட்கப்பட்ட கேள்விக்கு எண்ணெய் இல்லை, மழை இல்லை என்றால் நிச்சயமாக இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். என தெரிவித்தார்.