கடந்த ஒரு மாத காலமாக ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரேனில் வசிக்கக்கூடிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்து அகதிகளாக வேறு நாடுகளுக்கு தஞ்சம் அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரேன் நாட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், மேலும் ரஷ்யா தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இதனிடையே இரு நாடுகளிடையே போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையும் நடந்த சூழலில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில், உக்ரைன் – ரஷ்யா அதிகாரிகள் பங்கேற்ற மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடை பெற்றது.
சுமார் மூன்று மணி நேரம் நடை பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்படி, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் நாட்டுப் படைகளை குறைக்கப்பதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போரின் தீவிரம் குறையும் சூழல் உருவாகியுள்ளது.