ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்ற தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.
‘எனது பதவிக்காலம் முடியும்வரை நானே பிரதமராகப் பணியாற்றுவேன். அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் எங்கள் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும்’ என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
டெய்லி மிரருக்கு அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் பிரச்னைகள் உள்ளபோதும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
‘எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் பற்றிய ஊகங்கள் அனைத்தும் பொய்’ எனவும் மஹிந்த ராஜபக்ச மேலும் கூறினார்.
‘எனக்கும், ரணிலுக்கும், சஜித்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதெல்லாம் பொய்.’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, மின்சார, எரிபொருள் மற்றும் எரிவாயு சிக்கல்கள் எப்போது முடிவுக்கு வரும்? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், இந்த பிரச்னைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும் என்று கூறினார்.
இதேவேளை, நேற்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்த்தன, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து விரைவில் பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ரணில் விக்கிரமசிங்க முக்கிய பங்காற்றுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.