நேட்டோவில் சேராது ஆனால்ஐ. ஒன்றியத்தில் இணையும்உக்ரைன் – ரஷ்யா சமாதானக் குழுக்கள் இடையே துருக்கியில் இன்று நடைபெற்ற நேரடிப் பேச்சுக்கள் குறிப்பிடக்கூடிய முன்னேற்றத்தை எட்டியிருப்பதாக அங்காராவில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யா போரை நிறுத்தித் தனது படைகளை முற்றாக வெளியேற்றுமானால் அதற்குத் தனது தரப்பு விட்டுக்கொடுப்பாக நேட்டோவில் இணையும் விருப்பத்தை உக்ரைன் கைவிடும். அத்துடன்டொன்பாஸ் பிராந்தியத்தைத் தற்காலிகமாகத் தனது பிடியில் இருந்து விலக்கிவிடவும் அது இணக்கம் தெரிவித்துள்ளது.
பேச்சு மேசையில் உக்ரைன் தரப்பு முன்வைத்த திட்டங்கள் வருமாறு :
பாதுகாப்பு உத்தரவாதம் :சட்ட ரீதியாகஉத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்புஉத்தரவாதம் ஒன்றை மேற்கு நாடுகளிடம் இருந்து உக்ரைன் எதிர்பார்க்கிறது.நேட்டோ வழங்குகின்ற பாதுகாப்புக்கு நிகரான அல்லது அதைவிடச் சிறந்ததாகஅந்த உத்தரவாதம் அமைய வேண்டும்.நாங்கள் சர்வதேச பொறிமுறை ஒன்றுடன் கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். உத்தரவாத நாடுகள்நேட்டோ உடன்படிக்கையின் சரத்து 5போன்று விரைந்து பாதுகாப்பு உதவி அளிக்கும் விதமான விதிகளோடு அது அமைய வேண்டும் – என்று உக்ரைன்தரப்புப் பிரதிநிதி கூறியிருக்கிறார்.
நேட்டோ : பாதுகாப்பு உத்தரவாதம் நடைமுறைக்கு வந்தவுடன் நேட்டோவில் இணைவது என்ற தனது அபிலாசையை உக்ரைன் கைவிடும்.
பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்த பிறகு தனது எல்லைக்குள் வெளிநாட்டுபடைத் தளங்கள் எதனையும் உக்ரைன் வைத்திருக்க மாட்டாது.
பாதுகாப்பு உத்தரவாத உடன்படிக்கை உக்ரைன் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதைக் கட்டுப்படுத்தாது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உக்ரைன் தரப்பின் இந்த யோசனைகள் அடங்கிய திட்டத்தை ரஷ்யா சாதகமாகப் பரிசீலிக்க இணங்கியுள்ளது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இன்றைய பேச்சுக்களின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற ஒரு சாதக சமிக்ஞையாக தலை நகர் கீவின் சுற்று வட்டாரம் உட்பட உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தணிக்கப்படவுள்ளன என்று ரஷ்யப் பிரதிநிதி அறிவித்துள்ளார்.
இதே வேளை, அதிபர் மக்ரோன் இன்று மாலை மீண்டும் ஒரு தடவை புடினுடன் தொலைபேசி வழியே பேசினார். மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான சர்வதேச மீட்பு முயற்சிக்குப் புடினின் இணக்கத்தைப் பெறுவதற்காக மக்ரோன் அவருடன் தொடர்பு கொண்டார். போரின் தற்போதைய கட்டத்தில் அவ்வாறான ஒரு மீட்பு சாத்தியமில்லை என்று புடின் கூறியுள்ளார் என எலிஸே மாளிகை பின்னர் தெரிவித்துள்ளது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.