உக்ரைன் படையினரிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள் சிலர் கைகள் கட்டப்பட்டுத் தரையில் இருத்தி வைக்கப்பட்டிருப்பதையும் அவர்களில் சிலரது கால்களில் துப்பாக்கியால் சுடப்பட்டுவதையும் காட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத் தளங்களில் பரவியுள்ளது.
ரெலிகிராம் (Telegram) மெசெஞ்சர் சேவையில் வெளியாகிய ஐந்து நிமிட வீடியோவில் கைகள் கட்டப்பட்ட சுமார்பத்து வீரர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் சிலரது கால்களில் மிக நெருக்கமாக இருந்து துப்பாக்கியால் சுடப்படும் காட்சிகள் அடங்கியுள்ளன.
சிலர் இரத்தக் காயங்களுடன் தரையில்கிடக்கின்றனர். அந்த வீடியோ ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டு வேண்டும் என்றே திட்டமிட்டுப் பரப்பப்படுகின்ற போலி வீடியோ என்று உக்ரைன் படைகளின் தலைமைத் தளபதி முதலில் கூறியிருந்தார். வீடியோவின் நம்பகத் தன்மை இன்னமும் சுயாதீன தரப்புகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே சமயம் அதிபர் ஷெலான்ஸ்கியின் ஆலோசகர் Oleksiy Arestovych அந்த வீடியோ குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“போர்க் கைதிகளைத் துஷ்பிரயோகம் செய்வது போர்க் குற்றம் என்பதை எங்கள் இராணுவம், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார். கார்கிவ் (Kharkiv) நகருக்குத் தென் கிழக்கே ரஷ்யப்படைகள் வசம் இருந்து உக்ரைன் படைகளால் மீளக் கைப்பற்றப் பட்ட ஓர் இடத்திலேயே அந்த வீடியோ பதிவாகி இருப்பதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.