யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு 31-வது நாளாகத் தொடரக்கூடிய சூழலில் ரஷ்ய ஜெனரலான, லெப்டினென்ட் ஜெனரல் யாகோவ், யுக்ரேனின் தெற்கு நகரமான கெர்சனில் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய அதிகாரி ஒருவர், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்டுள்ள ஏழாவது ரஷ்ய ஜெனரல் இவர் என்றும் லெப்டினென்ட் ஜெனரல் வரிசையில் இரண்டாவது நபர் என்றும் கூறியுள்ளார்.
ரஷ்ய படை வீரர்களின் மன உறுதி மிகவும் குறைந்து வருவதால், ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் அதிக அளவில் படையெடுப்பில் பங்கேற்கும் சூழல் உருவாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, நேற்றைய படையெடுப்பின்போது, யுக்ரேனிய துறைமுக நகரத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து யுக்ரேன் நாட்டிற்கான பிரெஞ்சு தூதருடன் பேசியதாக மேரியோபோல் மேயர் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.