உலகம் செய்திகள்

புடின் ஒரு சர்வாதிகாரி! அவர் அதிகாரத்தில் நீடிக்க முடியாது!! போலந்தில் முழங்கினார் பைடன்!

பைடனின் முழக்கம் ஆட்சி மாற்றம் கோரும் உரை அல்ல என்று வெள்ளை மாளிகை விளக்கம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்தில் ஆற்றிய நீண்ட உரை ஒன்றில் விளாடிமிர் புடினை “சர்வாதிகாரி” என்று வர்ணித்திருக்கிறார். “கடவுளின் பெயரால் இந்த மனிதன் இனியும் அதிகாரத்தில் நீடிக்க முடியாது” என்றும் முழங்கியுள்ளார்.

நேட்டோவின் எல்லைக்குள் ஒரு சிறு அங்குலம் தானும் முன்னேறி அடிவைக்க முடியும் என்று எண்ணி விட வேண்டாம் என்றும் அவர் புடினை எச்சரிக்கை செய்தார். அவரது உரை போர்ப் பதற்றத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அமைந்ததுடன் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.

ரஷ்யாவில் யார் அதிகாரத்தில் இருப்பது என்பதை பைடன் தீர்மானித்துவிட முடியாது. அது ரஷ்யக் கூட்டமைப்பின் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட முடியும் – என்று கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் உடனடியாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

பைடனின் உரை நிறைவடைந்த கையோடு வெள்ளை மாளிகை வெளியிட்ட ஓர் அறிக்கையில், பைடனின் உரை” நேரடியாக ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தைக் கோரவில்லை” (not a direct call for regime change) என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல என்றுஅமெரிக்க அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

உக்ரைனுக்கான ஆதரவு என்பது” எங்களைப் பொறுத்தவரை ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதல்ல. தங்களை யார் ஆளவேண்டும் என்பதை ரஷ்ய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கென் இந்த மாத ஆரம்பத்தில் கூறியிருந்தார். ஆனால் பைடனின் போலந்து உரை,”புடினைத் தூக்கி எறியுங்கள்” என்று ரஷ்ய மக்களைக் கோரும் விதமாகக் கருதப்படக் கூடியது என்பதால் அது வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் இடையில் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

பைடனின் உரையில் பெரும் பகுதி ரஷ்ய மக்களுக்கான செய்திகளையே உள்ளடக்கியிருந்தது. “ரஷ்ய மக்களே, நான் எப்போதும் உங்களிடம் நேரடியாகவும் நேர்மையாகவும் பேசுகிறேன், நீங்கள் கேட்க முடிந்தால் இதைச் சொல்கிறேன். ரஷ்ய மக்களாகிய நீங்கள் எங்களுக்கு எதிரிகள் அல்லர். அப்பாவிக் குழந்தைகள் மற்றும் தாத்தா பாட்டிமார் கொல்லப்படுவதை நீங்கள் வரவேற்கிறீர்கள்.. அல்லது மருத்துவமனைகள், பள்ளிகள், மகப்பேற்று வார்டுகள் – கடவுளின் பொருட்டு – ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால் தாக்கப்படுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை நான்நம்ப மறுக்கிறேன் ”- என்று பைடன் தனது உரையில் கூறினார்.

ஜனநாயகத்துக்கும் எதேச்சாதிகாரத்துக்குமான இந்தப் போரில் நாங்கள் உக்ரைனின் பக்கம் நிற்கின்றோம். முன்பு இருந்திராதவாறு மேற்கு ஐக்கியப்பட்டுள்ளது. ஒரு நீண்ட போருக்கு நாங்கள் எங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் – என்றும் பைடன் கேட்டுக் கொண்டார்.

அதேசமயம் போலந்துத் தலை நகருக்கு வந்துள்ள உக்ரைன் அகதிகளை நேரில் சந்தித்தார் பைடன். அச்சமயம் அவர்களோடு உரையாடுகையில் புடினை அவர் “கசாப்புக்கடைக்காரர்” (“butcher”) என்று வர்ணித்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை பிரதமர் ரணில் !

namathufm

யாழில் கலாசார மத்திய நிலையம் எதிர்வரும் 28 ஆம் திகதி திறப்பு!

namathufm

ரொனால்டோவின் ‘லிவ் இன் டு கெதர் ’ உறவுக்கு ஷரியா சட்டத்தில் விலக்கு தருமா சௌதி?

namathufm

Leave a Comment