இந்திய -இலங்கை நட்பு ரீதியாக யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஒழுங்கமைப்புக்கள் இந்திய துணை தூதரக அதிகாரிகள், யாழ்.மாநகர சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், எதிர்வரும் 28 – 30 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இவரால் திறந்து வைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
இந்திய உதவியுடன், 1.2 பில்லியன் ரூபா செலவில் 12 மாடிகளுடன் கொண்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கலாச்சார மையமானது 600 பேரை உள்ளடக்கக் கூடியதான வசதிகளுடன் கூடிய திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாட்டுடனான மண்டபம், இணையதள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம், கண்காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம், அருங்காட்சியகம், நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புக்களை நடத்துவதற்கான வசதிகளும் உள்ளன.