ரஷ்யப்படைகளின் தாக்குதலினால்அழிவடைந்துள்ள மரியுபோல் நகரிலிருந்து மக்களை வெளியேற்ற சர்வதேச மனிதாபிமான மீட்பு நடவடிக்கை ஒன்றை (Mariupol humanitarian operation) மேற்கொள்ளப் போவதாக அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.
அடுத்த 48 முதல் 72 மணிநேரத்துக்குள் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக நகரின் மேயர் மற்றும் உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அடுத்து ரஷ்ய அதிபர் புடினின் இணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அவருடன் தொடர்பு கொள்ள விருக்கின்றோம் என்றும் மக்ரோன் கூறியிருக்கிறார்.
மிக வேகமாகவும் உறுதியாகவும் எங்களை இந்த மீட்பு நடவடிக்கைக்குத் தயாராக்கிக் கொள்ளப்போகிறோம். அதற்கான நடை முறைகள் குறித்து அடுத்த 72 மணி நேரத்திற்குள் புடினுடன் பேச்சு நடத்தப்படும்-என்று ஐரோப்பியக் கவுன்ஸிலின் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் ஒருவரிடம் மக்ரோன் கூறியுள்ளார்.
கிரேக்கம், துருக்கி ஆகியவற்றின் உதவியுடன் இந்த மீட்பு நடவடிக்கைக்கான முன் முயற்சிகளை பிரான்ஸ் தொடக்கியிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 30 நாட்களைக் கடக்கின்றது. தாக்குதலின் முதற் கட்டம் முடிவடைந்துள்ளது என்றும் அடுத்த கட்டமாக உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை முழுவதுமாக விடுவிப்பதற்கான தாக்குதலைத் தொடுக்கப் போவதாகவும் ரஷ்யப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் நாட்டின் மையப் பகுதியில் அமைந்திருந்த உக்ரைன் வான்படையின் கட்டளை மையம் இன்று ரஷ்யாவின் குருஸ் ஏவுகணைத் (cruise missiles) தாக்குதலுக்கு இலக்காகியதாக அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் போலந்துக்குச் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் எல்லையில் இருந்து 100 கிலோ மீற்றர்கள் தொலைவில் நேட்டோவின் அமெரிக்கப் படைகளது முகாம் ஒன்றுக்கு விஜயம் செய்துள்ளார்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.