உலகம் செய்திகள்

புடினின் நண்பி அலினாவை சுவிஸ் அரசு பாதுகாக்கிறதா?

வெளியேற்றுமாறு கோரி மனு ரஷ்யாவின் அலினா கபேவா உலகறிந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை. ஒலிம்பிக்கில் தங்கங்களையும் உலக சம்பியன் போட்டிகளில் பதக்கங்களையும் அள்ளியவர். தாள நடனத்துடன் இணைந்த ஜிம்னாஸ்டிக்கின் வரலாற்றில் எப்போதும் பெருமைக்குரிய இடத்தில் இருப்பவர்.

இடையில் ஊக்க மருந்து தொடர்பான சர்ச்சையால் இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அக் காலப்பகுதியில் ரஷ்ய அதிபரது செல்வாக்குக்கு உட்பட்டு அரசியலில் இறங்கினார். 2005 இல் விளாடிமிர் புடினின் “ஐக்கிய ரஷ்யா” கட்சியின் (United Russia party) அதி உயர் அதிகார சபையின் உறுப்பினர்களில் ஒருவரானார். புடினுடன் பொது நிகழ்வுகளில் தோன்றினார். 2008 இல் நாட்டின்அரச ஊடகங்களுக்கான பொதுச் சபையின் தலைவியாக நியமிக்கப்பட்ட பிறகு மொஸ்கோவில் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்ணாக விளங்கினார். முதல் மனைவியை விவாகரத்துச் செய்த புடின் அலினாவுடன் நெருக்கமாகியமை அவர்களிடையிலான உறவைச் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கின.

2008 இல் மொஸ்கோ பத்திரிகை ஒன்று (Moskovski Korrespondent) புடின் – அலினா உறவைக் கேள்விக்கு உள்ளாக்கியது. இருவரும் திருமணம் செய்யவுள்ளனர் என்ற தகவலை வெளியிட்டது. புடின் பின்னர் அதனை மறுத்திருந்தார். அதன் பிறகு இந்த விவகாரம் ரஷ்யாவில் பகிரங்க ரகசியமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் -சுவிஸ் நாட்டின் அல்ப்ஸ் பகுதியில் பாதுகாக்கப்பட்ட பங்களா ஒன்றில் அலினாவும் அவரது மூன்று குழந்தைகளும் தங்கிவாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்போதும் அலினா அங்கே தஞ்சமடைந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

உக்ரைன் மீதான போர் தொடங்கிய பிறகு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கேட்டு சுவிஸ் அரசின் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளில் Change.org இணையத் தளத்தில் தொடங்கப்பட்ட கையெழுத்துச் சேகரிக்கும் மனு, அலினாவை உடனடியாக வெளியேற்றுமாறு சுவிஸ் அரசைக் கோருகின்றது. ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் நாட்டவர்களின் 75 ஆயிரம் கையொப்பங்களைக் கோரியுள்ள அந்த மனுவில் இது வரை 66 ஆயிரம் பேர் ஒப்பமிட்டுள்ளனர்.

ரஷ்ய நாடாளுமன்றமாகிய டூமாவின் உறுப்பினராகவும் விளங்கிய அலினா, போரை முன்னெடுப்பதற்காக புடின் தீட்டிய திட்டங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்ற சட்டங்களிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதால் சுவிஸ் அரசு தனது நடுநிலைத் தன்மையைப் பேணும் வகையில் அலினாவை வெளியேற்ற வேண்டும் என்றும் மனு கோருகின்றது.

சுவிஸ் மறைவிடத்தில் இருந்தவாறு புடினின் போருக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது ஒலிம்பிக் பதக்கங்களையும் பறி முதல் செய்ய வேண்டும் என்றும் பிறிதொரு மனுவில் கோரப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ் தான் நாட்டில் பிறந்த அலினா கபேவாவுக்கு (Alina Kabaeva) தற்சமயம் 38 வயதாகும். இரண்டு இரட்டைக் குழந்தைகள் உட்பட அவரது ஜந்து பிள்ளைகளில் மூவர் அவரோடு சுவிஸில் தங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

IMF பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதியை சந்தித்தனர்

Thanksha Kunarasa

சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Thanksha Kunarasa

டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment