உலகம் செய்திகள்

சுவிஸில் மாடியில் இருந்து பாய்ந்தபிரெஞ்சு குடும்பத்தில் நால்வர் பலி!

சுவிற்சர்லாந்தின் Montreux (Vaud) என்றபகுதியில் வசிக்கும் பிரெஞ்சுக் குடும்பத்தவர்கள் ஐவர் இன்று காலை ஏழாவது தளத்தில் உள்ள வீட்டில் இருந்து வீழ்ந்துள்ளனர். அவர்களில் நால்வர் உயிரிழந்துவிட்டனர்.

ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.நாற்பது வயதுடைய தந்தை, தாய், எட்டு வயது மகள் மற்றும் தாயின் சகோதரி ஆகிய ஒரே குடும்பத்தவர்களே உயிரிழந்தவர்களாவர். 15 வயதுடைய மகன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். உயிரிழந்த குடும்பஸ்தர் வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என்றும் அவரது மனைவியும் மனைவியின் சகோதரியும் மருத்துவப் பணி புரிபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குடியிருப்பில் நீண்ட நாள் வசித்து வந்த அந்தக் குடும்பத்தவர்களது மரணங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தவர்கள் அனைவரும் கூட்டாகமாடியிலிருந்து பாய்ந்துள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குழந்தை ஒன்றுக்கு வீட்டில் வைத்துக் கல்வி போதிக்கும் விடயம் தொடர்பாக விசாரிப்பதற்காக பொலீஸார் இருவர் அழைப்பாணையுடன் அங்கு சென்றிருந்த சமயத்திலேயே வீட்டில் இருந்தோர் பல்கனி வழியாக வெளியே பாய்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவா ஏரியின் கரையில் அமைந்துள்ள அவர்களது வீட்டின் மூடிய அறைக்குள் நிகழ்ந்த இந்தக் “குடும்ப அவலம் ” தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் மர்மத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகப் பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பிரெஞ்சுப் பிரஜைகளான அவர்கள் சுவிஸில் வதிவிட அனுமதியுடன் வசித்து வந்துள்ளனர்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

மிரிஹான சம்பவம் – சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Thanksha Kunarasa

எரிபொருளுக்காக காத்திருந்த லொறி மோதியதில் முதியவர் பலி

Thanksha Kunarasa

உக்ரைன் அதிபர் பொம்மையால் குவிந்த லட்சக்கணக்கான டொலர் நிதி

Thanksha Kunarasa

Leave a Comment