தமிழகத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் ஒரு விடிவு காலத்தை தமது மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்தச் சூழலில், இலங்கைத் தமிழர்கள் அண்மையில் தமிழகத்துக்கு வரும் செய்தியை தாமும் பார்த்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதுடன், மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சட்டரீதியான கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
விரைவில் இதற்கு ஒரு விடிவு காலத்தை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தஞ்சம் கோரி சென்ற 16 பேர், தமது தாய் நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் கோரி இடம்பெயர்ந்ததாக தெரிவித்தனர்.