அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விசேட நேட்டோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜரோப்பாவுக்கு வருகை தருகின்றார். பிரெசெல்ஸ் நகரில் வியாழனன்று முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ள அவர் பின்னர் அங்கிருந்து போலந்து தலைநகர் வார்ஸோவுக்கும் விஜயம் செய்கிறார்.
பைடனின் இந்தப் பயணத்தின் போது ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடை அறிவிப்புகளை ஜரோப்பிய நாடுகளுடன் இணைந்து அவர் விடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் மொஸ்கோவில் கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் “ரஷ்யாவின் இருப்புக்கு அச்சுறுத்தல்(existential threat) ஏற்பட்டால் மாத்திரமே புடின் அணு வாயுதங்களைப் பயன்படுத்துவார்” என்று கூறியிருக்கிறார்.
எங்களிடம் ஒர் உள்ளகப் பாதுகாப்புக் கோட்பாடு உள்ளது, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து காரணங்களையும் நீங்கள் அந்தக் கோட்பாட்டில் அறிந்து கொள்ளலாம். நம் நாட்டிற்கு ஓர் இருத்தலியல் அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே ஒரு பதில் தாக்குதல், எங்கள் கோட்பாட்டுடன் உடன்படலாம்,” என்று அவர் கூறினார். அதேசமயம், ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பில் பைடன் ஐரோப்பாவுக்கு என்ன செய்தியை எடுத்துச் செல்கிறார் என்று வோஷிங்டனில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுவாலிவனிடம் (Jake Sullivan) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்,”அணு ஆயுத பாவனை தொடர்பில் அமெரிக்கா அதன் கூட்டாளி நாடுகளுடன் விவாதிக்கும் “என்று தெரிவித்துள்ளார். மோதலின் ஆரம்பத்தில், புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிப் பேசினார். அது நிச்சயமாக நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று. எங்கள் தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில், நாங்கள் இன்னும் எங்கள் அணுசக்தி தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. – ஆனால் இந்த சாத்தியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மேலும் அதனை முடிந்த வரை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். இந்த சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் எங்கள் கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் கலந்தாலோசிப்போம், எங்களது சாத்தியமான பதில் எதுவாக இருக்கும் என விவாதிப்போம். -இவ்வாறு அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.