சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் கொரோனா பரவல் இது வரை இல்லாத அளவுக்கு கொடூரமாகத் தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்களை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று மிகக் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீன அரசு.
சீனாவின் வடகிழக்கு ஜிலின் மாகாணத்தின் சுமார் 4.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான ஜிலின் நகரத்தில், திங்கள் கிழமை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வடகொரியா மற்றும் ரஷிய எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள ஜிலின் மாகாணத்தில், சீனாவில் ஏற்படும் கொரோனா தொற்று எண்ணிக்கையில் மூன்றில் 2 பங்கு பாதிப்பு இங்கு மட்டும் பதிவாகிறது என்பதனால் இந்த கடும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தின் தலைநகரான சாங்சுன் நகரத்தில் ஒன்பது லட்சம் மக்களும் கடந்த மார்ச் 11ம் தேதி முதல், உணவு வாங்குவதற்கு மட்டுமே அதுவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய நடவடிக்கைகளின் படி, மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற தொற்று நோய் எதிர்ப்பு பணியாளர்கள் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா நோயாளிகளுக்காக ஜிலின் மாகாணத்தில் எட்டு தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
வைரசின் பரவலை குறைக்கும் முயற்சியில், கிழக்கு சீனாவின் டாங்ஷான் நகரம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, 24 மணி நேரம் போக்குவரத்தை தடை செய்தது. மேலும் அங்குள்ள 7.7 லட்சம் மக்களை பரிசோதனை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமையன்று, சீனாவில் முதன்முறையாக கிட்ட தட்ட ஓராண்டுக்கு பின்னர் கொரோனாவால் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மில்லியன் கணக்கான மக்கள் தற்போது மற்ற சீன பிராந்தியங்களில் பூட்டப்பட்டுள்ளனர். புதிதாக மருத்துவமனை படுக்கைகளை உருவாக்க அதிகாரிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா பரவல் சீனாவின் சுகாதார கட்டமைப்பை சிரமத்திற்கு உட்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.